தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஆட்டு சந்தையில் விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.
வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே தனியார் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் கூடுகிறது. இச்சந்தையில் காய்கறிகள் மட்டுமின்றி ஆடு, மாடு கோழிகளும் விற்கப்படுவது வழக்கம். வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்தும். நாமக்கல், ஈரோடு, கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ஆட்டு வியாபாரிகள் இந்தச் சந்தைக்கு ஆடுகளை விற்கவும் வாங்கவும் வருவர்.
இந்நிலையில், வருகின்ற 8ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், இன்று கூடிய சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. ஆயிரக்கணக்கில் ஆடுகள் விற்பனைக்காக குவிந்தன. ஆடுகள் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபடச்சமாக ரூ. 25 ஆயிரம் வரை விற்கப்பட்டன.
இது போன்று, அதிகளவில் சேவல், கோழிகளும் விற்பனைக்காக மக்கள் கொண்டு வந்தனர்.மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து வந்த ஏராளமானோர் இறைச்சிக்காக அதிகளவில் ஆடு, கோழிகளை வாங்கிச் சென்றனர். சராசரியாக வாரத்தில் 50 லட்சத்திற்கு விற்பனையாகும் ஆடுகள் தீபாவளியை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
