Skip to content
Home » நீட் தேர்வு….. கவர்னர் ரவி, மத்திய அரசை கண்டித்து 20ம் தேதி திமுக உண்ணாவிரதம்

நீட் தேர்வு….. கவர்னர் ரவி, மத்திய அரசை கண்டித்து 20ம் தேதி திமுக உண்ணாவிரதம்

நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசு, மற்றும் கவர்னர் ரவியை கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி வரும் 20ம் தேதி  சென்னையிலும், மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதம் நடத்துகிறது. இது தொடர்பாக  இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,  மாணவரணி   தலைவர் ராஜீவ்காந்தி,  செயலாளர் எழிலரசன்,  மருத்துவர் அணி செயலாளர் எழிலன் நாகநாதன்,   தலைவர் கனிமொழி சோமு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து – அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது.

மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், பொறுப்பற்ற ஆளுநரையும் கண்டித்து, கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தி.மு.கழக இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும், வரும் ஆகஸ்ட் 20 அன்று அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத அறப்போரை நடத்தவுள்ளோம்.

அரியலூர் அனிதாவில் ஆரம்பித்த நீட் மரணம், குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன், அவரது தந்தை திரு.செல்வசேகர் வரை தொடர்கிறது. செல்வசேகர் அவர்களின் திருவுடலுக்கு மரியாதை செய்யச் சென்றபோது, யாரை தேற்றுவது – யாருக்கு ஆறுதல் சொல்வதென்று கேட்கும் அளவுக்கு அங்கு எல்லோரும் சோகத்தில் உறைந்திருந்தார்கள். நமக்கே அங்கு ஆறுதல் தேவை என்ற நிலைதான் இருந்தது.

இந்த மரணங்கள் அனைத்திற்கும், ஒன்றிய பா.ஜ.க. அரசும் – அவர்களுக்கு அடிமைச்சேவகம் செய்யும் அதிமுகவினரும் – நீட் பாதுகாவலர் ஆளுநர் ரவியுமே காரணம்.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் எண்ணத்தின் வெளிப்பாடாக நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
ஆனால், அந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

நம் மாணவச்செல்வங்களின் மரணம், ஆளுநரையோ, அவரை இங்கு அனுப்பியுள்ள ஆரிய மாடல் ஆட்களையோ துளியும் பாதிக்கவில்லை.

“நீட் மசோதாவில் கையெழுத்துப் போட மாட்டேன்”என்று கூறிய ஆளுநரிடம், சேலத்தைச் சேர்ந்த அம்மாசியப்பன் ராமசாமி நேருக்கு நேர் கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதில் அளிக்க முடியாத ஆளுநர் அவரிடம் இருந்த மைக்கை பிடுங்கி உட்காரச் சொல்கிறார்.

இத்தனைக்கும் ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய .அம்மாசியப்பன் ராமசாமி அவர்களின் மகள் நீட் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளார். நீட் தேர்வில் வெற்றிபெற்றவர்கள், பயிற்சி மையம் சென்று லட்சங்கள் செலவு செய்து தேர்வில் வென்றவர்கள்கூட நீட்டை எதிர்க்கிறார்கள்.

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பி வைத்த பிறகு, ஆளுநர் எப்படி அதில் கையெழுத்திட முடியும்?

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியின் போது-அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது வராத நீட், எடப்பாடி பழனிச்சாமியின் அடிமை ஆட்சியின் போது தமிழ்நாட்டுக்குள் வந்தது.

இப்படிப்பட்ட துரோக வரலாற்றைக் கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கோ, பிற அதிமுக அடிமைகளுக்கோ நம்மை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை.

இந்த நேரத்தில் மாணவச்செல்வங்களுக்கு நாங்கள் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான், நீட் தேர்வு என்பது நிரந்தரம் கிடையாது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிச்சயம் நீட் தேர்வை ஒழிப்பார்கள். அதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை. எனவே, மாணவச்செல்வங்கள் தன்னம்பிக்கையுடனும்- மன உறுதியுடனும் பொறுமை காத்திருக்க வேண்டுகிறோம்.

எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வு நடக்கும் என்ற எதேச்சதிகாரப் போக்கில் உள்ள ஒன்றிய அரசையும் – இல்லாத அதிகாரம் இருப்பது போல் மாளிகையில் கொக்கரிக்கும் ஆளுநரையும் கண்டித்து, இந்த மாபெரும் உண்ணாவிரதம் தமிழ்நாடெங்கும் நடைபெறவுள்ளது.

கழக இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி செயலாளர்கள் சென்னையில் நடக்கின்ற உண்ணாவிரத அறப்போரில் பங்கேற்கவுள்ளனர். அதேபோல, தமிழ்நாட்டில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரத அறப்போரில் அனைத்துத் தரப்பினரும் திரளாகப் பங்கேற்க அழைக்கின்றோம்.
நீட் தேர்வை ஒழித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையும் – விலைமதிப்பில்லா உயிரையும் காக்க ஓரணியில் திரள்வோம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!