திருச்சி கலெக்டரும், திருச்சி மக்களவைத் தொகை தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 2547 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 127 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம்முள்ள வாக்குச்சாவடிகளில் 65 % வாக்குச்சாவடிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கண்ட்ரோல் ரூமில் இருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் வாக்குப்பதிவு வீடியோ மூலம் கண்காணிக்கப்படும். சில இடங்களில் மைக்ரோ அப்சர்வர்கள் கண்காணிப்பார்கள்.
பதற்றமான பகுதிகளில் மத்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. அத்துடன் அங்கு ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு எந்திரம் மூன்று வைக்கப்படும். அத்துடன் ஒரு கண்ட்ரோல் யூனிட், ஒரு விவி பேட் எந்திரமும் வைக்கப்படுகிறது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர், வசதி செய்யப்படுகிறது. அத்துடன் குடிநீர், கழிவறை, சாமியானா பந்தல் போடப்படும். குழந்தைகளுக்கான கிரச் குறிப்பிட்ட இடங்களில் அமைக்கப்படுகிறது. வாக்காளர்களுக்கு உதவ தன்னார்வலர்களும் வாக்குச்சாவடிகளில் இருப்பார்கள்.
திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணியில் 12, 656 பேர் ஈடுபடுகிறார்கள். இவர்கள் தவிர 20% பணியாளர்கள் ரிசர்வில் இருப்பார்கள். இவர்கள் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு அங்கேயே தங்கி இருப்பார்கள். தேர்தலுக்கு முதல்நாள் மதியம் முதல், வாக்குப்பதிவு முடியும் வரை இவர்கள் அங்குள்ள ஒரு மண்டபத்தில் தங்கி இருப்பார்கள். எங்காவது தேர்தல் பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு மாற்று தேவைப்பட்டால் ரிசர்வில் உள்ள இவர்கள் உடனடியாக அந்த இடத்துக்கு செல்வார்கள்.
19ம் தேதி காலை 5.30மணிக்கு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாதிரி வாக்குப்பதிவு ஏஜெண்ட்கள் முன்னிலையில் நடைபெறும். ஏஜெண்ட்கள் வர தாமதமானால் 5.45 மணிக்கு நடத்தப்படும். சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். 6 மணிக்குள் வந்த அனைவரும் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
வாக்குப்பதிவு மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். திருச்சி மாவட்டத்துக்க 7 கம்பெனி மத்திய போலீசார் வந்துள்ளனர். ஒரு கம்பெனி என்பது 72 பேர் அடங்கியது. இவர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நிறுத்தப்படுவார்கள்.
100% வாக்குப்பதிவு நடைபெற அனைவரும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களியுங்கள்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.