Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதைப்பொருள் மாஃபியாக்களை வேரறுக்க வேண்டும்

போதைப்பொருள் மாஃபியாக்களை வேரறுக்க வேண்டும்

போதைப்பொருள் மாஃபியாக்களை வேரறுக்க வேண்டும்! மதுவின் பிடியிலிருந்து தமிழக மக்களை மீட்க உறுதியான நடவடிக்கை தேவை என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் நாகபட்டணம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2026 மே 1 முதல் நவம்பர் 15 வரை போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 10,559 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 6,057 வழக்குகளுடன் ஒப்பிடுகையில் இது 74.3 சதவீத அதிகரிப்பாகும். போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட அளவும் 1.45 லட்சத்திலிருந்து 4.85 லட்சமாக உயர்ந்துள்ளது. இது சுமார் 234 சதவீத அதிகரிப்பாகும்.

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கமும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பழக்கமும் அதிகரித்து வருவது சாதாரணமான சட்டம்–ஒழுங்குப் பிரச்சினை அல்ல; இது தமிழகத்தின் எதிர்காலத்தையே அச்சுறுத்தும் மிகப்பெரிய சமூகப் பேரிடராகும். ஒரு தலைமுறையின் கல்வி, உடல்நலம், உழைப்பாற்றல், குடும்ப வாழ்க்கை ஆகியவற்றைச் சீரழிக்கும் இந்தப் பேராபத்தைத் தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. இந்தப் பொறுப்பிலிருந்து அரசு எந்தக் காரணத்தைக் கூறியும் தப்பிக்க முடியாது.

காவல்துறையின் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதை அது வெளிநாடுள்ள புள்ளிவிவரங்கள் காட்டினாலும், தமிழகத்தில் போதைப்பொருள் பிரச்சினை எந்த அளவுக்குத் தீவிரமான சவாலாக உருவெடுத்துள்ளது என்பதையும் உணர்த்துகின்றன. வழக்குகளைப் பதிவு செய்வதிலும், அவ்வப்போது போதைப்பொருட்களைக் கைப்பற்றுவதிலும் அரசு திருப்தியடைந்துவிடக் கூடாது. போதைப்பொருள் விற்பனையின் வேரைக் கண்டறிந்து வெட்டியெறிவதே உண்மையான வெற்றியாகும்.

போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் செயல்படும் பெரும் விற்பனை வலைப்பின்னல்கள், நிதியுதவி அளிப்பவர்கள், முக்கியக் கடத்தல்காரர்கள் ஆகியோரைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். சிறு விற்பனையாளர்களைக் கைது செய்வதோடு நடவடிக்கை நின்றுவிடக் கூடாது; இந்தக் குற்றத் தொழிலின் மூளையாகவும் முதுகெலும்பாகவும் செயல்படுபவர்கள் தப்பிச் செல்ல அனுமதிக்கக் கூடாது. காவல்துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, கல்வித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்த நிரந்தரச் செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களில் போதைப்பொருள் விற்பனையை முற்றிலுமாகத் தடுக்கச் சிறப்புக் கண்காணிப்பும் விரைவான புகார் நடவடிக்கையும் ஏற்படுத்தப்பட வேண்டும். மாணவர்களிடையே தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் நடத்தப்பட வேண்டும். போதைப்பழக்கத்திற்கு ஆளாகும் மாணவர்களையும் இளைஞர்களையும் அவமானப்படுத்தாமல், ஆரம்ப நிலையிலேயே ஆலோசனை மற்றும் மருத்துவ உதவி வழங்க வேண்டும்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைச் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மூலம் மீட்டெடுப்பதும் அரசின் கடமையாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் போதிய மருத்துவர்கள், உளவியல் ஆலோசகர்கள் மற்றும் மறுவாழ்வு வசதிகளுடன் கூடிய மையங்கள் அமைக்கப்பட வேண்டும். இதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி, செயல்பாட்டின் முன்னேற்றத்தை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இளைஞர்களின் எதிர்காலத்தைப் போதைப்பொருள் விற்பனையாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அரசு வேடிக்கை பார்க்க முடியாது.

போதைப்பொருள் மாஃபியாக்களை வேரறுப்பது, போதைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வின் மூலம் மீட்டெடுப்பது, போதையில்லா தமிழ்நாடு என்ற லட்சியத்தை நோக்கி உறுதியுடன் நகர்வது ஆகியவை தமிழ்நாடு அரசின் அவசரக் கடமைகளாகும். இதற்கான உறுதியான அரசியல் முடிவையும், வெளிப்படையான செயல்திட்டத்தையும் தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

அரசுக்கு மட்டுமின்றி ஒத்துமொத்த தமிழ் சமூகமும் இப்பிரச்னையை தீர்ப்பதற்கு அக்கறையுடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மக்களின் உயிரையும் இளைஞர்களின் எதிர்காலத்தையும் விட எந்த அரசின் வருவாயும் பெரிதல்ல! போதைப்பொருளற்ற, மதுவின் பாதிப்பிலிருந்து விடுபட்ட ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்குவதே அரசு உட்பட அனைத்துத் தரப்பினரின் மக்கள் நலப் பொறுப்பாகும்.

error: Content is protected !!
Secret Link