Skip to content
Home » மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள்.. துரை வைகோ குற்றச்சாட்டு

மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள்.. துரை வைகோ குற்றச்சாட்டு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை பதவி நீக்கம் செய்ய குடியரசு தலைவரை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் மதிமுக சார்பில் நடைபெற்று வருகிறது. திருச்சியில் இன்று அந்த கையெழுத்து இயக்கத்தில் மதிமுக முதன்மை செயலாளர் துறை வைகோ கலந்து கொண்டார். சிந்தாமணி அண்ணா சிலை அருகே கையெழுத்து இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார். அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கு பொதுமக்களிடம் அவர் கையெழுத்து பெற்றார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரை வைகோ, …

தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழகத்துக்கும் கேடு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் செயல்பட்டு வருகிறார். தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அமைச்சரவை, சட்டமன்ற தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்.

கடந்த காலங்களில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் முதல் கொண்டு பல்வேறு விஷயங்கள் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.

இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாததால் 9.20 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னேறி இருப்பதற்கு காரணம் கல்விதான். ஆனால் தமிழ்நாட்டில் கல்விக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். அது தொடர்பாக நாங்கள் எல்லாம் குரல் எழுப்பியும் எந்தவித பதிலும் ஆளுநர் தரப்பில் இருந்து வரவில்லை.
இதுபோன்ற பல விவகாரங்களில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என். ரவி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கையெழுத்து இயக்கம் தொடங்கி உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் கூட்டணி இயக்கங்கள் துணையோடு இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறோம். இந்த கையெழுத்து இயக்கத்தை பொதுமக்கள் நலனுக்காக செய்து வருகிறோம். இந்தியா என்பது பல்வேறு ஜாதிகள், இனங்கள், மதங்கள் மொழிகள் பின்பற்றி வாழும் மக்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அடிப்படையில் வாழ்ந்து வருகிறார்கள் இதற்கு வேட்டு வைக்கும் வகையில் பொது சிவில் சட்டம் தொடர்பாக பிரதமரின் கருத்து இருக்கிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் அம்பேத்கர் கொண்டு வந்தது. இந்தியாவில் வாழும் பலதரப்பட்ட மக்களை அவர்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு தான் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கினார். மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக தான் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம் என கூறுகிறார்கள். நாட்டில் விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் அதிக அளவு உள்ளது, மணிப்பூரில் ஒரு மாத காலமாக கலவரம் நடந்து வருகிறது இதற்கெல்லாம் பதில் கூறாமல் பிரதமர் இருக்கிறார். பொது சிவில் சட்டம் மூலமாக குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு தான் பாஜக அது குறித்து பேசி வருகிறார்கள்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் என ம.தி.மு.க சார்பில் நடக்கும் கையெழுத்து இயக்கத்திற்கு எங்களின் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். எங்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்சினையையும் உருவாக்கி விடாதீர்கள்.

தி.மு.க.வினர் எங்கள் கையெழுத்து இயக்கத்திற்கு முழு ஆதரவு அளித்து வருகிறார்கள், முழு ஒத்துழைப்பும் அளிக்கிறார்கள். முதலமைச்சர்,அமைச்சர்கள் கையெழுத்து போடவில்லை. ஆனால் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரும் கையெழுத்து போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், எங்கு போட்டியிடுவது என்பது குறித்தும் எங்கள் கட்சியின் தலைமையும் எங்கள் கூட்டணி தலைமையும் தான் முடிவெடுக்கும் என்றார். கையெழுத்து இயக்கத்தில் மதிமுகவை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!