Skip to content
Home » பாயிண்ட், பாயிண்ட்டாக எடுத்து வைத்து E.Dயை திணறடித்த செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல்.. முழுவிபரம்..

பாயிண்ட், பாயிண்ட்டாக எடுத்து வைத்து E.Dயை திணறடித்த செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல்.. முழுவிபரம்..

  • by Senthil

சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியை  கைது செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஏற்கனவே,  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அவை தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது அவர்  2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரைண நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் அமலாக்கத்துறை சார்பில் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் 45-வது பிரிவின்படி, குற்றம் புரிந்திருக்கவில்லை என நீதிமன்றம் திருப்தியடையும் வகையில் நிரூபிக்க வேண்டும். ஆனால், வழக்கு விசாரணையே தொடங்காத தற்போதைய நிலையில் அப்பாவி எனக் கூற முடியாது. செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் நியாயமான சந்தேகம் உள்ளது. டிஜிட்டல் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளது குறித்து விசாரணையின் போதுதான் நிரூபிக்க முடியும் என அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு. திருத்தப்பட்ட ஆதாரங்களை நீக்கிவிட்டால் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை. சந்தேகத்துக்கு இடமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும். அமலாக்கத்துறையின் மொத்த வழக்கும், சோதனையின்போது பறிமுதல் செய்த பென் டிரைவ் மற்றும் ஹார்டு டிஸ்க் அடிப்படையிலேயே உள்ளது. சோதனையின்போது ஐந்து மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்த நிலையில், நீதிமன்றத்தில் வேறு மின்னணு சாதனங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. பறிமுதலுக்கு பின், அந்த மின்னணு சாதனங்களில் 67 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோதனைக்கு பின் பென் டிரைவ் குறித்த அறிக்கையில் 284 கோப்புகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பின்னர் அந்த பென் டிரைவ் குறித்த மற்றொரு அறிக்கையில் 472 கோப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அமலாக்க துறையின் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளன. இந்த ஆதாரங்களுக்கு என்ன மதிப்பு உள்ளது? ஆதாரங்கள் திருத்தம் தொடர்பாக தற்போது நிரூபிக்க முடியாத நிலையில் விசாரணை முடியும் வரை சிறையில் இருக்க வேண்டுமா? பறிமுதலுக்கு பின் பென் டிரைவ், ஹார்டு டிஸ்கில் இருந்த கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. புதிய கோப்புகள் அதில் உருவாக்கப்பட்டுள்ளன என்பது தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது. கையெழுத்து இல்லாத கடிதங்களை அமலாக்க துறை ஆதாரங்களாக சேர்த்துள்ளது. பணத்தை வசூலித்து உதவியாளர் சண்முகத்திடம் வழங்கியதாகக் கூறுகிறார்கள். ஆனால் சண்முகம் உதவியாளரே அல்ல. சட்டவிரோதமாக எந்த பண பரிமாற்றமும் நடைபெறவில்லை. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி வங்கிக் கணக்கில் ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அது குற்றம் மூலம் ஈட்டப்பட்டது என அமலாக்க துறை தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக வருமான வரித்துறைக்கு முறையாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் 64 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் 58 லட்சம் எடுக்கப்பட்டது. இத்தொகை தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்குக்காக எடுக்கப்பட்டு, பின் அத்தொகை வேறு கணக்கில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டது.   பொருளாதார குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது. இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதாலும், சாட்சிகள் அச்சுறுத்தப்படலாம் என்பதாலும், ஜாமீன் கொடுத்தால் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது என்பதாலும், சந்தர்ப்ப சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனவும் கூறி ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை. புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. வெளிநாடுகளுக்கு தப்பிவிடுவார் என்றால் யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது. தற்போது அமைச்சராக இல்லாத காரணத்தால் சந்தர்ப்ப சூழல் மாறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக இருக்கிறார் என்பதற்காக ஜாமீன் மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே ஜாமீன் வழங்க வேண்டும்.. என பாயிண்ட் பாயிண்ட்டாக தங்களது தரப்பு விளக்கங்களை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் விவரித்தார்…. அமலாக்க துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “எந்த ஆதாரங்களும் திருத்தப்படவில்லை. ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்துதான் பெறப்பட்டன” என்றார். இதையடுத்து அமலாக்க துறை தரப்பு வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை நாளை  பிற்பகலுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்தி வைத்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!