நாகை: கை திருமருகல் கடைவீதியில் மமக வேட்பாளர் ஜவாஹிருல்லாவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் முத்தரசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: ஒன்றிய அரசு தமிழ்நாட்டை முற்றிலுமாக புறக்கணித்து வருகிறது. வேளாண் விஞ்ஞானி நெல்லின் உற்பத்தி விலைக்கு ஆகும் செலவை இரு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டுமென கூறினார். ஆனால் அதை பிரதமர் மோடி குப்பையில் தூக்கி வீசினார். நெல்லுக்கு ஊக்கத்தொகை கொடுப்பதால் உற்பத்தி அதிகமாகி வருகிறது. இதனால் ஒன்றிய அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் கூறுகிறார். விவசாயிகளுக்கு உரிய உற்பத்தி விலையை ஒன்றிய அரசு கொடுக்க மறுக்கிறது. மாநில அரசையும் கொடுக்க விடாமல் தடுக்கிறது.
நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த வேண்டுமென தமிழக முதல்வர் டெல்லிக்கு கடிதம் எழுதுகிறார். அதன்பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டு டெல்லிக்கு சென்றனர். ஆனால் அறிக்கை வருவது இல்லை. இப்படி விவசாயிகளை வஞ்சிக்கும் பாஜவுக்கு எடப்பாடி ஆதரவு தெரிவிக்கிறார்.திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகையை சர்க்கார் பணம் தானே என எடப்பாடி கூறுகிறார். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.10 ஆயிரம் தருவேன் என கூறுகிறார். இந்த பணம் அவரது அப்பன் வீட்டு பணமா.
மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வருவார். அவர் வந்தவுடன் மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்தனர். அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி இப்போது சட்டம் ஒழுங்கை பற்றி பேச என்ன அருகதை உள்ளது. இவ்வாறு பேசினார்.
