“சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணும் பணியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களை ஈடுபடுத்தக்கூடாது,” என, அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
அசாம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், ஏப்., 9ல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. மேற்கு வங்கத்தில் நாளை இரண்டாவது கட்ட தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில், 234 தொகுதிகளுக்கு கடந்த 23ல் தேர்தல் நடந்த நிலையில், மே 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
இந்நிலையில் இப்பணிகளில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களை ஈடுபடுத்தக்கூடாது என, இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் அனுப்பிய உத்தரவு:
தேர்தல் நடந்த யூனியன் பிரதேசம், மாநிலங்களில் உள்ள ஊரகப் பகுதிகளில் குடிமக்களின் அடிப்படை தேவைக்கான குடிநீர், தேர்தல் அறிவிப்பிற்கு பின் துவங்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவே, ஓட்டு எண்ணும் பணிகளில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களை ஈடுபடுத்தக்கூடாது. ஊரக வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
