திருப்பத்தூர் லண்டன் மிஷன் ரோட்டில் சாய்ந்த மின்கம்பம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி சீரமைப்புப் பணி! பொதுமக்கள் அதிருப்தி!
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட லண்டன் மிஷன் ரோடு, 1-வது வார்டு பகுதியில்

பழமையான மின்கம்பம் ஒன்று சாய்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இன்று காலை சுமார் 7 மணியளவில் வாகனத்தைத் திருப்பும்போது பழைய மின்கம்பத்தின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் மின்கம்பம் சாய்ந்து, அதிலிருந்த மின் ஒயர்கள் மற்றும்

கம்பிகள் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சாலை வழியாக பள்ளி மாணவ, மாணவிகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் அதிகளவில் சென்று வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் பொதுமக்களும் இந்த வழித்தடத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சாய்ந்த மின்கம்பத்தைச் சீரமைக்கும் பணியில் மின்சாரத் துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பொதுமக்கள் அதிகம் நடமாடும் சாலையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள், எச்சரிக்கை பலகைகள் மற்றும் தடுப்புகள் அமைக்காமல் பணிகள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மின்கம்பம் சாய்ந்துள்ள நிலையில், மின் ஒயர்கள் மூலம் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்தைத் தற்காலிகமாகத் தடுத்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரமாக மின்சாரம் தடைப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பெரும் விபத்து அல்லது உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பாக மின்சாரத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆபத்தான நிலையில் உள்ள பழைய மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் உயிர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டாமல், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
