திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த புதூர்நாடு மலை,புலியூர் கிராமத்தில் அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூர் கலால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்நிலையில் கலால் போலீசார் புலியூர் கிராமத்தை சேர்ந்த துக்கன் மகன் அனுமன் (54) என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது போலீசார் எதிர்பார்த்தபடி அரசு மதுபான பாட்டில்கள் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால் வீட்டில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி ஒன்று பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்த கலால் போலீசார் அனுமனை பிடித்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் அனுமன் மீது வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையில் நாட்டுத் துப்பாக்கி சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
