Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எல்பின் மோசடி- பாதிக்கப்பட்டவர்களுக்கு திருச்சி போலீஸ் கோரிக்கை

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த எல்பின் (Elfin) நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்ட 14 பொருளாதார மோசடி வழக்குகளின் விசாரணையை முடித்து, இறுதி அறிக்கைகள் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் பணம் வசூலித்துக் கொடுத்த முகவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு மதுரை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எல்பின் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலீட்டுத் தொகை இரட்டிப்பாகக் கிடைக்கும் என்றும், நிலம் வழங்கப்படும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.

ஆனால், முதலீடு செய்த பணத்தைத் திரும்ப வழங்காமல் ஏமாற்றியதாக எல்பின் இ-காம் பிரைவேட் லிமிடெட் (Elfin E.Com Private Ltd), எல்பின் ரிசல்ட் (Elfin Result), ஸ்பாரோ குளோபல் டிரேடிங் (Sparrow Global Trading), ஸ்பாரோ ரியாலிட்டி (Sparrow Reality) ஆகிய நிறுவனங்கள் மீது திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் குற்ற எண் 01/2019-ன் கீழ் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 406, 420, 120(B) மற்றும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம் 1997-ன் பிரிவு 5-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குடன் சேர்த்து மேலும் 13 வழக்குகளின் விசாரணையும் விரைந்து முடிக்கப்பட்டு, இறுதி அறிக்கைகள் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

எனவே, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், பணம் வசூலித்துக் கொடுத்தவர்கள் மற்றும் இதுவரை பணத்தைத் திருப்பிக் கொடுக்காதவர்கள் அனைவரும் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் செயல்படும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன்பு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களில் ஏமாறாமல் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!
Secret Link