திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் பாதுகாப்பான தரையிறக்கத்தையும் வழிகாட்டும் துல்லியத்தையும் மேம்படுத்தும் வகையில், ரூ.73 லட்சம் செலவில் புதிய நவீன தூர அளவீட்டுக் கருவி நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தின் 27-வது ஓடுபாதையில் தரையிறங்கும் விமானங்களுக்காக தென்கொரியாவில் தயாரிக்கப்பட்ட நவீன குறைந்த மின்சக்தி தூர அளவீட்டுக் கருவி நிறுவப்பட்டுள்ளது. இதனை விமான நிலைய இயக்குநர் ஜி. கோபாலகிருஷ்ணன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்தக் கருவி ஏற்கெனவே உள்ள கருவி இறங்கும் வழிகாட்டி அமைப்புடன் இணைந்து செயல்படும். இதன்மூலம் விமானிகள் ஓடுபாதையின் தொடக்கப் பகுதியிலிருந்து தங்களது விமானம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைத் துல்லியமாக அறிய முடியும்.
வெறும் 100 வாட் மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கருவி, 0.2 கடல் மைலுக்கும் குறைவான அளவீட்டுப் பிழையுடன் தகவல்களை வழங்கும் திறன் கொண்டது. ஒரே நேரத்தில் 200 விமானங்களுக்கு தூர அளவீட்டுச் சேவையை வழங்க முடியும்.
மேலும், இரட்டை ஒலிபரப்பு அலகுகள், கண்காணிப்புக் கருவிகள், மாற்று மின்சார வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. விமானப் பரிசோதனை மற்றும் அளவுத்திருத்தப் பணிகள் முடிக்கப்பட்டு, உரிய அனுமதிகளுக்குப் பிறகு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதன் மூலம் திருச்சி விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் தரையிறங்கும் துல்லியம் மேலும் மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
