Skip to content
Home » நாங்க விசாரிக்கல…..அமலாக்கத்துறை பல்டி….

நாங்க விசாரிக்கல…..அமலாக்கத்துறை பல்டி….

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு ஆஸ்பத்திரிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை நிறைவடைந்ததையடுத்து, அவருக்கு இதயத்தின் 3 முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

செந்தில் பாலாஜியின் தரப்பில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்ட நிலையில் நீதிபதி அல்லி அனுமதி வழங்கினார். இதனையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்போடு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து வரப்பட்டார். காவேரி மருத்துவமனையில் ஏழாவது தளத்தில் ஸ்கை வியூ வார்டு (sky view ward) என்ற தனி அறை ஒதுக்கப்பட்டு அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அளித்துள்ள பேட்டியில் ” காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை நடைபெறும் என ” தெரிவித்துள்ளார்.

விசாரணை கைதியாக நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் பதிவேட்டு எண் ஆகியவை வழங்கப்பட்டும், அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது.

அமலாக்க துறையின் விசாரணைக்கு ஏற்றவாறு அவருடைய உடல்நிலை எப்படி இருக்கிறது என்று அமலாக்கத்துறையினர் காவேரி மருத்துவமனை மருத்துவரிடம் இருந்து விவரங்களை சேகரித்துள்ளனர். மருத்துவர்கள் கொடுத்துள்ள விவரங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்க துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை  உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறை சார்பாக  சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முறையிட்டார். செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீது  இன்று அல்லது நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி சூரிய காந்த் அமர்வு தெரிவித்தனர்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ் தெரிவித்ததாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!