Skip to content
Home » வருமானத்திற்கு அதிகமாக சொத்து…புதுகை கோர்ட்டில் , மனைவியுடன் விஜயபாஸ்கர் ஆஜர்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து…புதுகை கோர்ட்டில் , மனைவியுடன் விஜயபாஸ்கர் ஆஜர்

  • by Senthil

அதிமுக  ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர், இப்போது விராலிமலை எம்எல்ஏவாக இருக்கிறார். இவர், கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது,  ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கடந்த 2016-21 காலகட்டத்தில்  தன்னுடைய பெயரிலும், தன்னுடைய மனைவி உள்ளிட்ட குடும்பத்தார்களின் பெயரிலும், தான் பங்குதாரராக இருக்கும் நிறுவனங்களின் பெயர்களிலும், வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடி வரையிலும் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

இதையடுத்து, கடந்த 2021-ல் அக்டோபர் மாதம், விஜயபாஸ்கர் மற்றும் அவருக்குத் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.. இந்த சோதனைகளில், விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் ரூ.23,85,700 பணம், தங்க நகைகள், கனரக வாகனங்கள், ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் அறிவித்திருந்தனர். மேலும், விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35,79,90,000 வரையிலும் சொத்து சேர்த்ததாக 2021 அக்டோபர் 17-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கும் பதிவு செய்திருந்தனர்.

இதில், அவரின் மனைவி ரம்யா பெயரும் இடம்பெற்றிருக்கிறது. அதேபோல, கடந்த மே மாதம் 22-ம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி, விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீதான 216 பக்க குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு, நீதிமன்றம் மூலம் விஜயபாஸ்கருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில், விஜயபாஸ்கர் கடந்த 5-ம் தேதி ஆஜரானாா்.

அப்போது, 29-ம் தேதி, (இன்று) விஜயபாஸ்கரும், அவரின் மனைவி ரம்யாவும் நேரில் ஆஜராக புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  அதன்படி  விஜயபபாஸ்கர்  முன் வாசல் வழியாக  கோர்ட்டுக்குள் வந்தார். பின்வாசல் வழியாக விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா  கோர்ட்டுக்குள் வந்தார்.   முன்னாள் அரசு வழக்கறிஞர் ராமநாதன் உள்ளிட்ட அதிமுக வழக்கறிஞர்கள் விஜயபாஸ்கருடன் வந்தனர். தொண்டர்களும் பெருமளவில் வந்திருந்தனர். இதனால் கோர்ட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

நீதிபதி   பூர்ண ஜெயானந்த் , முதலாவது  வழக்காக  விஜயபாஸ்கர் வழக்கை எடுத்தார். அவரது வழக்கை வரும் செப்டம்பர்26ம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் ஆஜராகவேண்டும் என உத்தரவிட்டார். உடனடியாக விஜயபாஸ்கரும், அவரது மனைவியும்  கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!