ஸ்ரீஹரிகோட்டா : இந்தியாவின் புவி கண்காணிப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், இ.ஓ.எஸ்.-05 செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி., எப்-17 ராக்கெட் இன்று அதிகாலை 2:55 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட ராக்கெட், 18 நிமிடங்கள் 34 வினாடிகள் பயணித்த நிலையில், தனது மூன்று நிலைகளையும் வெற்றிகரமாக கடந்து செயற்கைக்கோளை பிரித்தது. அதிகாலை 3:14 மணியளவில், 19.8 டிகிரி சாய்வுடன், பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கி.மீ., உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் இ.ஓ.எஸ்.-05 நிலைநிறுத்தப்பட்டது.
இ.ஓ.எஸ்.-05 செயற்கைக்கோள், பூமியை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலப்பரப்பை மிகத்துல்லியமாக படம்பிடித்து, தகவல்களை உடனுக்குடன் பூமிக்கு அனுப்பும் திறன் கொண்டது.
வெள்ளம், புயல், மேகவெடிப்பு, இடி-மின்னல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை கண்காணித்து, முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த செயற்கைக்கோள் உதவும்.
மேலும், விவசாய நிலங்கள், வனப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் தொடர்பான முக்கிய தரவுகளை சேகரிக்கவும் பயன்படும்.
இந்த ஏவுதலில் பயன்படுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் 51.7 மீட்டர் உயரமும், 420.5 டன் எடையும் கொண்டது. இது இஸ்ரோவின் 19வது ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஆகும். மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டின் மேல் நிலையில் கிரையோஜெனிக் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இ.ஓ.எஸ்.-05 செயற்கைக்கோளுக்கு ‘வானத்தின் கண்’ என இஸ்ரோ செல்லப்பெயர் சூட்டியுள்ளது.
