மகாராஷ்டிர மாநிலம் புனேவில், முன்னணி கார்ப்பரேட் ஐ.டி நிறுவன பெண் உதவி மேலாளரை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது பங்களாவில் சிறைவைத்து, பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூர சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிய பிரபல போலி சாமியார் உட்பட 7 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அமானுஷ்ய சக்தி என ஏமாற்று வேலை:அரியானாவைச் சேர்ந்த ராதாமோகன் மிஸ்ரா (59) என்ற போலி சாமியார், புனேவில் ‘மாடர்ன் குருலம்’ என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்துள்ளார். தன்னை ‘ராதேஷ்யாம்’ என்றும், கடவுளின் அவதாரம் என்றும் கூறிக்கொண்ட இவர், தன்னிடம் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகக் கூறி பக்தர்களை நம்ப வைத்துள்ளார்.15 ஆண்டுகால கொடூரம்:பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் இவருடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்பில் இருந்துள்ளனர். குடும்பப் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறி, அப்பெண்ணை மூளைச்சலவை செய்து கணவரிடமிருந்து விவாகரத்து பெற வைத்துள்ளார் சாமியார். அதன்பின், தனது பங்களாவிலேயே தங்கவைத்து கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெண்ணை அகோரி போல மிரட்டியதுடன், ஆபாச வீடியோ எடுத்தல், எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தல் மற்றும் கட்டாயப்படுத்திச் சிறுநீரை அருந்தச் செய்தல் போன்ற கொடூரங்களை அரங்கேற்றியுள்ளார். மேலும், மிரட்டி அப்பெண்ணின் சொத்துகளையும் தன் பெயருக்கு மாற்றியுள்ளார். சாமியாரின் பேச்சை நம்பி, பெண்ணின் குடும்பத்தினரே தொடக்கத்தில் இதனை நம்பவில்லை.ரகசிய சுரங்கப்பாதை – போலீஸ் அதிரடி:பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக அளித்த புகாரின் பேரில், கடந்த ஜூன் 16 நள்ளிரவில் 4 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சாமியாரின் பங்களாவில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு ஒரு ரகசிய சுரங்கப்பாதையும், நிலத்தடி அறையும் கண்டறியப்பட்டன. மேலும் எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் கருவிகள், 12 லேப்டாப்கள், மொபைல் போன்கள், சிசிடிவி பதிவுகள், ரூ.6.5 லட்சம் ரொக்கம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதையடுத்து முதன்மைக் குற்றவாளி ராதாமோகன் மிஸ்ரா, அவரது கூட்டாளி கன்வல் நயன் (68) மற்றும் பெண் ஊழியர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது மோசடி மற்றும் மூடநம்பிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2001 முதல் 2026 வரை சாமியார் இது போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
