வேலூர் மாவட்டம் குடியாத்தம் சேர்ந்த காந்தி, தனது மனைவி ராசாக்தி மற்றும் ஐந்து வயது சந்தீப் என்ற மகனுடன் ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் புங்கனூரில் உள்ள ஊட்டூரில் கோழிப் பண்ணைகளில் காவலாளிகளாகப் பணிபுரிந்து தங்கி வசித்து வந்தனர். போயக்கொண்டாவின் யனாடிபாளையத்தைச் சேர்ந்த நரசிம்ஹுலுவுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்த ராசாத்தி, அவருடன் வசித்து வந்தார். காந்தி தனது ஐந்து வயது மகன் சந்தீப்பை அழைத்துக்கொண்டு, தன் மனைவியையும் தன்னுடன் வருமாறு கேட்டுக்கொண்டார். இந்தச் சூழலில் திருமணத்திற்கு புறம்பான உறவுக்கு தடையாக உள்ள காந்தியை கொல்ல முடிவு செய்த நரசிம்முலு தனது நெருங்கிய உறவினர்களான ஹனுமந்து, பாப்பண்ணா மற்றும் நாகராஜு ஆகியோருடன் சேர்ந்து, காந்தியைப் பக்ஷிராஜபுரத்திற்கு அருகிலுள்ள போயக்கொண்டா வனப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அழைத்துச் சென்றனர். காந்தி அவர்களுடன் செல்லும்போது அவரது ஐந்து வயது மகனும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.
இந்தநிலையில் காந்தி உள்பட அனைவரும் மது அருந்தி கொண்டிருந்ததை சந்தீப் வனப்பகுதியில் மறைந்திருந்து பார்த்து கொண்டிருந்தான். இந்தநிலையில் உடன் வந்த அனைவரும் சேர்ந்து காந்தியை அடித்து கொலை செய்து தப்பி சென்றனர். இதனை மறைந்திருந்த சந்தீப் பார்த்த நிலையில, அவர்கள் சென்ற பிறகு அருகில் சென்று தனது தந்தை காந்தியை எழுப்ப முயன்றான். ஆனால் அப்போதே காந்தி இறந்துவிட்டதாலும், இருள் சூழ்ந்த நிலையில் சந்தீப் என்ன செய்வதேன்று தெரியாமல் தனது தந்தை சடலத்துடன் இரவு முழுவதும் இருந்தான். பின்னர் விடிந்ததும் காட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பக்ஷிராஜபுரத்தில் உள்ள ஒரு அங்கன்வாடி ஆசிரியரிடம் கூறினான். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து புங்கனூர் ஊரக காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாய்பிரசாத், எஸ்.ஐ. சின்னரெட்டன்னா மற்றும் போலீசார் சிறுவன் சந்தீப் சொன்ன இடத்திற்கு அனைவரும் சென்றனர். அங்கு காந்தி சடலத்தை பார்த்த போலீசார், பிரேத பரிசோதனைக்காக புங்கனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் ஈடுப்பட்டதாக சிறுவன் சந்தீப் கூறிய தகவலின் அடிப்படையில் நரசிம்மலு மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களை தேடி வருகின்றனர். கொலைக்கு பிறகு காந்தியின் மனைவி ராசாத்தியும் காணாமல் போனதால் அவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதில் இருவரை கைது செய்திருப்பதாகவும் அவர்களிடம் விசாரணைக்கு பிறகு மேலும் சிலர் கைது செய்யப்பட வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
