Skip to content
Home » தந்தை, மகன் மரணம்- ஆளுநர் ரவியும்- ஆர்.எஸ்.எஸ் கொள்கையுமே காரணம்… கே.பாலகிருஷ்ணன்

தந்தை, மகன் மரணம்- ஆளுநர் ரவியும்- ஆர்.எஸ்.எஸ் கொள்கையுமே காரணம்… கே.பாலகிருஷ்ணன்

  • by Senthil

நீட் திணிப்பால் மகனும், தந்தையும் துயர மரணமடைந்ததற்கு ஆளுநர் ரவியும், ஆர்.எஸ்.எஸ் கொள்கையுமே முழுமுதல் காரணம் என சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வால் பறிபோன 2 உயிர்கள்.. மகனின் இழப்பை தாங்கமுடியாமல் உயிரை மாய்த்துக்கொண்ட தந்தை

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு திணிக்கப்பட்டதன் கொடூர விளைவாக, சென்னை குரோம்பேட்டையில் வசித்துவரும் ஜெகதீஸ்வரன் என்ற மாணவரும், அவருடைய தந்தையும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்துள்ளது. இதுபோன்ற தற்கொலைகள் பிரச்சனைக்கு தீர்வில்லை, போராட்டங்களை வலுப்படுத்துவதே அவசியம் என்ற போதிலும், நீட் தேர்வை தொடர்ந்து திணித்து வரும் ஒன்றிய பாஜகவும் அதன் கருவியாகச் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியுமே இந்த மரணங்களுக்கு முழுமுதல் காரணம் ஆகும். இத்தனைக்கு பிறகும் தமிழ் நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் போக்கிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறது.

ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பெற்றோர் ஆளுநரிடம் நேரடியாகவே நீட் திணிப்பின் துயரங்களை முன்வைத்தனர். ஆனால், அவர்களின் நடைமுறை அனுபவத்தை முழுமையாக பேச விடாமல் மைக்கைப் பிடுங்கியதுடன் ‘நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவே மாட்டேன்’ என்று அராஜகமான உடல் மொழியுடன் உதாசீனம் செய்து பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. நீட் தேர்வின் காரணமாக நடக்கும் மாணவர் தற்கொலைகளை மலினப்படுத்தி, எதிர்க் கட்சிகள் காசு கொடுத்து இப்பிரச்சனையை பெரிதாக்குவதாகவும் பேசினார். அரசமைப்புச் சட்டத்திற்கு நேர் விரோதமான, ஆர்.எஸ்.எஸ் கொள்கையின் வெளிப்பாடான இந்தப் பேச்சு பரவலான கண்டனத்திற்குள்ளானது.

நீட் தேர்வை புகுத்திவிட்டால் ஊழல் முறைகேடுகள் தடுக்கப்படும், கல்வியின் தரம் உயரும் என்றுதான் அதனை ஆதரிப்போர் வாதங்களை வைக்கிறார்கள். மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்தியோ உண்மைக்கு நேர் மாறாக இருப்பதைக் காட்டுகிறது. அவரோடு படித்து, அவரை விடவும் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பணம் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளனர். ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் மருத்துவ கனவு நிராசையாகிறது. நீட் பயிற்சி மையங்களும் ஒவ்வொரு ஆண்டும் கட்டணக் கொள்ளை மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களையும், அவர்களது குடும்பங்களையும் சுரண்டுகிறார்கள். பல ஆண்டுகள் நுழைவுத்தேர்வுக்காக செலவிடுவதால் ஏற்படும் அழுத்தமும், மாணவர்களிடையே உருவாகும் பாகுபாடும், கட்டணக் கொள்ளையின் அதிகரிப்பும் நீட் தேர்வின் நேரடி விளைவுகளாகும். மேலும், இதனால் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பின் அடித்தளமே சிதைக்கப்படும் ஆபத்தும் உள்ளது.

இதுபோன்ற நிலைமைகள் ஏற்படும் என்பதால்தான் தமிழ்நாட்டின் சட்டமன்றம் இந்தப் பிரச்சனையில் நீண்ட விவாதம் நடத்தி, நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் தன்னுடைய அதிகார வரம்பிலேயே வராத ஒரு சட்டத்தை பல மாதங்கள் கிடப்பில் போட்டு வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கே தாமதப்படுத்தினார். இப்போது வரையிலும் உண்மைக்கு மாறான தகவல்களைச் சொல்லி தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பப்  பார்க்கிறார். ஒன்றிய பாஜக ஆட்சியும், ஆர்.எஸ்.எஸ்-ம் அவரை ஆதரித்து வழிநடத்துகின்றன. இப்போக்கினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மாணவி அனிதா முதல் மாணவர் ஜெகதீஸ்வரன் மற்றும் அவருடைய தந்தையின் தற்கொலை வரை அனைத்து துயரங்களுக்கும் காரணம்  நீட் திணிப்பு மட்டுமே ஆகும். ஆனால், நீட் தேர்வின் கொடுமையை தற்கொலைகளால் முடிவுக்கு கொண்டுவர முடியாது. சிபிஐ(எம்) உள்ளிட்ட கட்சிகளும், தமிழ்நாடு அரசாங்கமும் நீட் திணிப்பிற்கு எதிராக விடாப்பிடியான போராட்டத்தை நடத்தி வருகின்றன. பெற்றோரும், மாணவர்களும் இந்த அநீதிக்கு எதிரான போராட்டக் களத்தில் கைகோர்க்க வேண்டும், மனம் தளர்ந்து வேதனையான முடிவுகளுக்கு செல்லக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஒன்றிய அரசாங்கம், இனியாவது இப்பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து நீட் திணிப்புக் கொள்கையை மாற்றிக்கொள்வதுடன், குடியரசுத் தலைவர் உடனடியாக நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!