கரூர் மாவட்டம், மனவாசி பகுதியைச் சேர்ந்த நடனக் கலைஞரும், நடன ஆசிரியருமான ஜீவா(48), பல்வேறு கோவில் திருவிழாக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் நடனமாடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர்.
இந்நிலையில், நேற்று கரூர் தொழில்பேட்டை பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் ஜீவா நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அவரது உடல் பாலாமாபுரம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நடனக் கலைஞர்கள் ஜீவாவின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர். பின்னர், அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் சாலையில் நடனமாடியபடி ஊர்வலமாக வழியனுப்பினர்.
