Skip to content
Home » காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்… அரியலூர் கலெக்டர்  அதிரடி ஆய்வு… 

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்… அரியலூர் கலெக்டர்  அதிரடி ஆய்வு… 

அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்டம்  முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  செந்துறை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 செந்துறை அரசு மருத்துவமனையினை நேரில் பார்வையிட்டு காய்ச்சல் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், 24 மணி நேரமும் காய்ச்சலால் வரும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படுகிறதா மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறதா எனவும், சிகிச்சை பெறுபவர்களின் விவரம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஊசி, மருந்து, மாத்திரைகள் இருப்பு விவரம் மற்றும் அதன் காலாவதி நாள், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளின் விவரம் மற்றும் படுக்கை வசதிகள் எண்ணிக்கை விவரங்கள் குறித்தும், மேலும் மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மார்களுக்கு போதிய அளவில் இரும்புசத்து மாத்திரை, தடுப்பூசிகள் அளிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார்.
சிகிச்சைக்கு வந்த பொதுமக்களிடம் மருத்துவர்கள் உரிய நேரத்திற்கு வருகை தந்து, சிகிச்சை மேற்கொள்கின்றனரா, பொதுமக்களுக்கு தேவையான உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்குரிய முடிவுகள் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார். இதேபோன்று கிராம செவிலியர்கள் மூலம் கர்ப்பிணித்தாய்மார்கள் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றனரா, அவர்களுக்கு தேவையான ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகளுடன் விஷ பூச்சிக்கடி, பாம்பு கடி, நாய்கடி உள்ளிட்டவைக்கான அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டார்.
பின்னர், நல்லாம்பாளையம், சிறுகடம்பூர் மற்றும் உஞ்சினி ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை தூய்மை பணிகளை வீடு வீடாக சென்று மாவட்ட ஆட்சித்தலைவர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பொதுமக்களிடம் கொசு மருந்து அடிக்கப்படும் விவரம் குறித்தும் கேட்டறிந்ததுடன், பொதுமக்களிடம் தங்கள் வீடுகளின் சுற்றுப்புறத்தில் மழைநீர் தேங்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர், உடைந்த பொருட்கள் மற்றும் தேங்காய் ஓடுகள் போன்ற கொசுப்புழு வளரும் காரணிகளை கண்டறிந்து அகற்றிட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.மாரிமுத்து, செந்துறை வட்டாட்சியர் வேல்முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ஜாகிர் உசைன், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!