கரூர் அருகே ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் திடீர் தீ விபத்து: 17 தையல் இயந்திரங்கள் எரிந்து சேதம்.
கரூர், தான்தோன்றி மலை அருகே உள்ள வாஞ்சிநாதன் நகர் பகுதியில் அருள் முருகன் என்பவர் நடத்தி வரும் ஆடை தயாரிப்பு
நிறுவனத்தில் வழக்கம்போல் இன்று பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு பின்னர் மீண்டும் வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தையல் இயந்திரங்களில் இருந்து புகை வெளியேறியது, சிறிது நேரத்தில் தீ பரவத் தொடங்கியது.
இதனை கண்ட ஊழியர்கள் முதற்கட்டமாக தீயை அணைக்க முயன்றும், தீ வேகமாக பரவியதால் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் 17 தையல் இயந்திரங்கள் மற்றும் ஆடை தயாரிப்பிற்காக குவித்து

வைக்கப்பட்டிருந்த துணிகள் எரிந்து சேதமடைந்து.
தீ விபத்து ஏற்பட்டவுடன் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.
இதுகுறித்து சம்பவ இடத்தில் தான்தோன்றி மலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
