Skip to content
Home » நீலகிரி ஜெயஸ்ரீ….. படுகர் இனத்தின் முதல் விமானி ஆனார்… மலைவாழ் மக்கள் கொண்டாட்டம்

நீலகிரி ஜெயஸ்ரீ….. படுகர் இனத்தின் முதல் விமானி ஆனார்… மலைவாழ் மக்கள் கொண்டாட்டம்

நீலகிரியில் வாழும் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக கோத்தகிரியை சேர்ந்த படுகர் இன பெண் ஜெயஸ்ரீ தேர்வாகி உள்ளதை அந்த மாவட்ட மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற நகர பகுதிகளிலும், கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.  கடந்த சில வருடங்களாக இந்த சமுதாயத்தை சேர்ந்த பலர் கப்பல் படை, ராணுவம் உள்பட பல்வேறு துறைகளில் சேர்ந்து பணியாற்றியும் வருகிறார்கள்.

அந்த வகையில் நீலகிரி படுகர் சமுதாயத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முதல் முறையாக விமானியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நெடுகுளா குருக்கத்தியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மணி. இவருடைய மனைவி மீரா. இவர்களுக்கு ஜெயஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்த ஜெயஸ்ரீதான் நீலகிரி படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக தேர்வாகியுள்ளார்.

ஜெயஸ்ரீ பள்ளிப்படிப்பை கோத்தகிரியில் முடித்தார். இதன்பின்னர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்த இவர் சில காலம் ஐடி துறையில் வேலை பார்த்து வந்தார். அதன் பின்னர் விமானியாக முடிவு செய்து பைலட் பயிற்சி முடித்து தற்போது விமானியாக சேர்ந்துள்ளார். இதற்காக தென்னாப்பிரிக்காவில் விமான பயிற்சி எடுத்து கொண்டார். இது குறித்து ஜெயஸ்ரீ கூறுகையில், “எங்களது சமுதாயத்தில் அண்டை மாவட்டம், மாநிலங்களுக்கே படிக்க அனுப்ப தயங்குவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மற்றொரு நாட்டுக்கு விமான பயிற்சி பெற தைரியமாக எனது பெற்றோர் என்னை அனுப்பி வைத்தார்கள்.

அதேபோல் பெண்களுக்கு இவ்வளவு செலவு தேவையா? என்று பலர் கேள்வி கேட்டபோதும், என் அப்பா, அம்மா, பெண் குழந்தைக்குதான் இவ்வளவு செலவு தேவை என்று பதில் கூறுவார்கள். பொதுவாக விமானி என்றால் ஊர் சுற்றும் வேலை என்று அனைவரும் நினைப்து வழக்கம். ஆனால் வழக்கமான வேலைகளைவிட விமான வேலையில் சவால்கள் அதிகம் உள்ளது. 3 அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை, மனநல பரிசோதனைகள் செய்ய வேண்டும். அதில் தேர்வு பெறவில்லை என்றால் விமானியாக தொடர முடியாது. பணியை இழக்க வேண்டிய நிலை வரும். எ

விமானியாக வர விரும்புவோருக்கு மன தைரியம் அதிகளவில் இருக்க வேண்டும். இப்படி ஒரு வேலைக்கு நான் வர காரணம் எனது ஆரம்ப கால பள்ளி படிப்பும், அங்கிருந்த ஆசிரியர்களும் முக்கிய காரணம் என்று கூறுவேன். எங்கள் சமுதாயத்திலும், நீலகிரி மாவட்டத்திலும் முதல் பெண் விமானியாக உருவாகி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” இவ்வாறு ஜெயஸ்ரீ கூறினார். நீலகிரியில் வாழும் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக தேர்வான கோத்தகிரி ஜெயஸ்ரீக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!