Skip to content
Home » முதல்கட்ட தேர்தல் களத்தில்……4 மாஜி முதல்வர்கள்…. 8மத்திய மந்திரிகள்

முதல்கட்ட தேர்தல் களத்தில்……4 மாஜி முதல்வர்கள்…. 8மத்திய மந்திரிகள்

  • by Senthil

இந்தியாவில் 18-வது மக்களவைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  தேர்தல் களத்தில், மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, கிரண் ரிஜிஜு, சர்பானந்த சோனோவால், சஞ்சீவ் பாலியன், ஜிதேந்திர சிங், பூபேந்திர யாதவ், அர்ஜூன் ராம் மேக்வால், எல்.முருகன், முன்னாள் முதல்-மந்திரிகள் நபம் துகி (அருணாசல பிரதேசம்), பிப்லப் குமார் தேவ் (திரிபுரா),  வைத்திலிங்கம்(புதுச்சேரி காங் வேட்பாளர்),  ஓபிஎஸ்( ராமநாதபுரம் சுயேச்சை வேட்பாளர்)முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் உள்ளனர்.

மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரியான நிதின் கட்காரி, மராட்டிய மாநிலம் நாக்பூர் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 7 முறை எம்.பி.யாக இருந்த விலாஸ் முத்தேம்வரை 2014 தேர்தலில் 2.84 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் கட்காரி. 2019ல் மராட்டிய காங்கிரஸ் தலைவரான நானா படோலை 2.15 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

அருணாச்சல பிரதேசம் மேற்கு தொகுதியில் முன்னாள் முதல் மந்திரியும் அருணாசல பிரதேச காங்கிரஸ் தலைவருமான நபம் துகியை எதிர்த்து மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு போட்டியிடுகிறார். அசாம் மாநிலம் திப்ருகர் தொகுதியில் மத்திய மந்திரி சர்பானந்த சோனோவால் போட்டியிடுகிறார். உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. மத்திய மந்திரி சஞ்சீவ் பாலியன், சமாஜ்வாடி கட்சியின் ஹரீந்திர மாலிக் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் தாரா சிங் பிரஜாபதி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

மோடியின் மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள இளம் மந்திரியான ஜிதேந்திர சிங், உதம்பூர் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் போட்டியிடுகிறார். மத்திய மந்திரி பூபேந்திர யாதவ், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் தொகுதியில் போட்டியிடுகிறார். பா.ஜ.க.வின் பாரம்பரிய ஓட்டு வங்கியாக கருதப்படும் யாதவ சமூகத்தினரின் ஆதரவுடன் களமிறங்கி உள்ள பூபேந்திர யாதவை எதிர்த்து அப்பகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லலித் யாதவ் போட்டியிடுகிறார்.

மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால், ராஜஸ்தான் மாநிலம் பிகானர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி கோவிந்த் ராம் மேக்வாலை எதிர்த்து போட்டியிடுகிறார். தமிழகத்தின் நீலகிரி தொகுதியில், அந்த தொகுதியில் தற்போதைய தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் தொலைத்தொடர்பு மந்திரியுமான ஆ.ராசாவை எதிர்த்து, மத்திய மீன்வளத் துறை இணை மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார். இருவருக்குடையே கடும் போட்டி நிலவுகிறது.

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எல்.முருகன் நீலகிரியில் முதல் முறையாக போட்டியிடுகிறார். சமீபத்தில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அரசியருக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன், தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தரின் மகளான தமிழிசை, கடந்த தேர்தலில் தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழியிடம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். கனிமொழி எம்.பி. மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். தூத்துக்குடியில் அவரை எதிர்த்து இந்த முறை பா.ஜ.க. கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயசீலன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் சிவசாமி வேலுமணி களமிறங்கி உள்ளார். தமிழ்நாடு பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் கணபதி பி.ராஜ்குமார், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!