ஆந்திர மாநிலத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்கக் கோரி சென்னை காசிமேட்டில் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் ரூ.10 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கடந்த மீன்பிடித் தடைக்காலம் ஜூன் மாதத்தில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜூன் 15ஆம் தேதிக்குப் பிறகு மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 7 படகுகளில் இருந்த 70-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஆந்திர கடலோரக் காவல் படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். மேலும், அவர்களது படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் பிடிக்கப்பட்ட மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன், மீன்வளத்துறை சார்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. சென்னை மாவட்ட ஆட்சியரும் ஆந்திர மாநிலத்திற்குச் சென்று அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க முடியாது என ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பல்வேறு கட்டங்களாக தமிழக அமைச்சர்களையும், தமிழக முதல்வரையும் சந்தித்து மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், வேறு வழியின்றி இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலைநிறுத்தம் காரணமாக காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன் விற்பனை, ஐஸ் விற்பனை, மீன்பிடித் தொழில் உள்ளிட்ட மீன்பிடித் தொழில் சார்ந்த எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.
இந்தப் போராட்டத்திற்குப் பிறகாவது தமிழக அரசு தங்களது கோரிக்கையை கவனத்தில் கொண்டு, ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மீனவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
