Skip to content
Home » திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு…. படங்கள்

திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு…. படங்கள்

  • by Senthil

இந்தியாவின் குடியரசு தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆங்காங்கே தேசிய கொடியேற்றி கண்கவர் அணிவகுப்பும் நடைபெறும். சென்னையில் கடற்கரை சாலையில் கவர்னர் கொடியேற்றுவார். மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள் கொடியேற்றுவார்கள். அரசு அலுவலகங்கள்,  கல்வி நிலையங்கள்  ஆகிய இடங்களிலும் கொடியேற்று விழா நடைபெறும்.

குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.எனவே மக்கள் கூடும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் குடியரசு தின விழா நடைபெறும் பகுதியில் இன்று மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருச்சியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. மக்கள் அதிக அளவு கூடும் ஜங்ஷன் ரயில் நிலையத்தில்  கடந்த சில தினங்களாக  ரயில்களில் சோதனை நடக்கிறது. அதுபோல பயணிகளின் உடமைகள், பார்சல்கள் சோதிக்கப்பட்டு  வருகிறது. பயணிகள் வழக்கம் போல  மெட்டல் டிடெக்டர் வாசல் வழியாக அனுமதிக்கப்படுகிறார்கள்.

அத்துடன் பார்சல்கள், லக்கேஜ்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. இன்று மதியம் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் குருவாயூர் ரயில் திருச்சி வந்தபோது அதில்  ரயில்வே போலீசார் , ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து சோதனை நடத்தினர். முன்னதாக 80க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் ரயில் நிலைய பிளாட் பாரங்களில் அடையாள கொடி அணிவகுப்பு நடத்தினர்.  அதில் கான்ஸ்டபிள் முதல்  உயர் அதிகாரி வரை அனைவரும் பங்கேற்றனர். ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பயணிகளுக்கு விளக்கும் வகையில் இந்த அணிவகுப்பு நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!