Skip to content

இனி பட்டா இடங்களில் தான் கொடிக்கம்பம் நட வேண்டும்- ஐகோா்ட் உத்தரவு

மதுரையைச் சேர்ந்த சித்தன், மாடக்குளம் கதிரவன் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தனித்தனியே தாக்கல் செய்த மனுக்களில், ‘‘அதிமுக கட்சி விழாவையொட்டி கூடல் புதூர் பகுதியில் ஏற்கனவே உள்ள அதிமுக கொடிக்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கொடிக்கம்பம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும். மேலும், மதுரை பைபாஸ் ரோடு பஸ் நிறுத்தம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் அதிமுக கட்சி கொடிக்கம்பம் அமைக்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

இந்த மனு ஏற்கனவே பல கட்டங்களாக விசாரணைக்கு வந்தபோது, ‘‘பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடிக்கம்பங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது? தமிழ்நாட்டில் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரத்தை அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’’ என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. அரசு தரப்பில், ‘‘தமிழ்நாட்டில் கொடிக்கம்பம் வைப்பது குறித்து ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக 114 வழக்குகள் பதிவாகியுள்ளன’’ என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ‘‘இதில் போலீசாரின் பங்கு என்ன? கட்சி கொடிக்கம்பம் வைப்பது தொடர்பாக ஏதேனும் விதிகள் உள்ளனவா’’ என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்த மனுக்களை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பல அதிரடி  உத்தரவுகளை பிறப்பித்தார்.   அதன் விவரம்:

தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்கள் மற்றும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் அனைத்து கொடிக்கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். தவறினால் அரசே அகற்றி விட்டு அதற்குரிய செலவு தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும். எதிர்காலங்களில் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு வருவாய்த்துறையினர் அனுமதிக்கக் கூடாது. பட்டா இடங்களில் கொடி கம்பங்கள் அமைப்பது குறித்து அரசு உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் நேரங்களில் கட்சி கொடிகள் வைப்பதற்கு உரிய வழிகாட்டுதலை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் அனுமதி வழங்கலாம். அவ்வாறு அனுமதி வழங்கும்பட்சத்தில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது என்ற உறுதிமொழியையும், வைப்புத் தொகை மற்றும் வாடகை தொகையும் வசூல் செய்திருக்க வேண்டும். இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். இந்த உத்தரவை அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உடனடியாக அனுப்பி அதை செயல்படுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவு முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் உறுதிப்படுத்த வேண்டும். கொடிகம்பங்களுக்கு அனுமதி கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவிட்டார்.

* பொது இடங்களில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் மதம், சாதி சம்பந்தமான அமைப்புகள் கொடிக்கம்பங்களை வைப்பதால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.
* இதுமட்டுமின்றி போக்குவரத்துக்கு இடையூறு, விபத்து ஏற்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் உருவாகின்றன.
* சில அரசியல் கட்சிகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக அளவிலான உயரங்களிலும் கட்சி கொடிக்கம்பங்களை அமைக்கின்றன. இது ஏற்கத்தக்கதல்ல.

இவ்வாறு  உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!