வையம்பட்டி அருகே பணம் வைத்து சூதாட்டம்: 4 பேர் கைது – 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வையம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதேஷ் தலைமையிலான போலீசார் நேற்று மாலை கிருஷ்ணகவுண்டனூர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு கும்பல் பகடை உருட்டி, பணம் வைத்து சூதாடிக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்டம் முள்ளிப்பாடியைச் சேர்ந்த சங்கர் (25), வையம்பட்டி தவலைவீரன்பட்டியைச் சேர்ந்த காளையரசன் (26), ஆறுமுகம் (47) மற்றும் அப்பு (24) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பகடை உருண்டைகள் மற்றும் 300 ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர்கள் பயன்படுத்திய 6 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
மணல் கடத்தல்: லாரி பறிமுதல் – டிரைவர் தப்பி ஓட்டம்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, திருச்சி நிலவியல் மற்றும் சுரங்கத் துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர் ராமர் தலைமையிலான குழுவினர் நேற்று காலை காட்டுப்புத்தூர் – எம்.புதூர் கால்நடை மருத்துவமனை அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த இஷர் ரக லாரியை தடுத்து நிறுத்த முயன்றனர். அதிகாரிகளைக் கண்டதும் லாரியை ஓட்டி வந்த நபர், வாகனத்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து அதிகாரிகள் அந்த லாரியை சோதனை செய்தபோது, அதில் சுமார் 3 யூனிட் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மணலுடன் கூடிய லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து ஆய்வாளர் ராமர் அளித்த புகாரின் பேரில், காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
புகையிலை பொருட்கள், கஞ்சா பறிமுதல் – 5 பேர் கைது!
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒரு பெண் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டீ கடையில் புகையிலை விற்பனை: 2 பேர் கைது
மண்ணச்சநல்லூர் மற்றும் கல்லக்குடி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் மண்ணச்சநல்லூர்,அழகியமணவாளம் பகுதியில் உள்ள அரச மரம் அருகே புகையிலை விற்ற அருண் (22) என்பவரை மண்ணச்சநல்லூர் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ‘ஹான்ஸ்’ பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் கல்லக்குடி, புள்ளம்பாடி பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் மறைத்து வைத்து புகையிலை விற்ற குமாரசாமி (51) என்பவரை கல்லக்குடி போலீசார் கைது செய்தனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 1,500 மதிப்பிலான 50 ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் 100 விமல் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவெறும்பூர் மற்றும் காட்டுப்புத்தூரில் கைது
போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது.
திருச்சி, திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மில் காலனி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது தனது வீட்டின் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தனலட்சுமி (68) என்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
3 இளைஞர்கள் கைது: காட்டுப்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீலமஞ்சம்பட்டி கால்வாய் கரை அருகே கஞ்சா விற்பனை செய்த கிருபாகரன் (25), வசந்த் (19) மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார் (21) ஆகிய மூன்று இளைஞர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் எச்சரிக்கை
மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
