புதுக்கோட்டை மாவட்டம் மெய்வழிச்சாலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அதிகரித்து வரும் குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகக் கூறி, திடக்கழிவு மேலாண்மை மற்றும் நுண் உரம் தயாரிப்பு மையம் அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்திற்குட்பட்ட மெய்வழிச்சாலை, இரும்பாளி, விளத்துப்பட்டி, கீழக்குறிச்சி மற்றும் சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மெய்வழிச்சாலையில் மாதந்தோறும் நடைபெறும் இரண்டு கொடியேற்ற விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். மேலும், ஆண்டுதோறும் நடைபெறும் ஐந்து முக்கியத் திருவிழாக்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரு வார காலம் தங்கியிருந்து வழிபாடுகளில் கலந்து கொள்வதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் திருவிழாக்கள் மூலம் வெளியேறும் மக்கும், மக்காத குப்பைகளின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.
தற்போது முறையான குப்பை சேகரிப்பு மற்றும் தரம் பிரிக்கும் கட்டமைப்பு இல்லாததால், மெய்வழிச்சபை நிர்வாகத்தினர் தன்னார்வலர்களைக் கொண்டு சொந்த செலவில் குப்பைகளை அகற்றி வருவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், சில பகுதிகளில் சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் குப்பைகள் தேங்கிக் கிடப்பதாகவும், சில இடங்களில் குப்பைகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மனுதாரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மெய்வழிச்சாலை புறநகர் வேதம் ஓதும் பாடசாலையைச் சேர்ந்த

உறுப்பினர்கள் டி. மணிகண்டன், பி. சண்முகசுந்தரம் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அதில், மெய்வழிச்சாலை மற்றும் சுற்றுவட்டார ஊராட்சிகளுக்குப் பொதுவாக திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க உரிய இடத்தை உடனடியாகத் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், தினமும் வீடு வீடாக பேட்டரி வாகனங்கள் மூலம் குப்பைகளைச் சேகரிக்கவும், மக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் நுண் உர மையம் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கு அனுப்பும் பொருள் மீட்பு மையம் அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் பணிகளில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தூய்மை பாரத இயக்கம், 15-வது நிதிக்குழு மானியம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி, குப்பை மேலாண்மை மையத்தை விரைவாகச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை புதுக்கோட்டை கலெக்டர் கவனிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.
