சென்னை அடுத்த செம்மஞ்சேரி நுங்கம்பாளையம் பகுதியில், நீதிமன்ற உத்தரவின்படி அடுக்குமாடி குடியிருப்புக்கு நடுவே உள்ள பகுதியை அகற்றி வாகனப் பாதை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் வந்ததால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
செம்மஞ்சேரி குமரன் நகர் பிரதான சாலையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தக் குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் ஏற்கெனவே வாகனப் பாதை செல்லும் வகையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையாக இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்தனர். அப்போது, குடியிருப்புவாசிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தாங்கள் முறையான ஆவணங்களை வைத்திருப்பதாகவும், அரசுக்கு உரிய வரிகளைத் தொடர்ந்து செலுத்தி வருவதாகவும் தெரிவித்த குடியிருப்புவாசிகள், தங்களது குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் எவ்வித ஆக்கிரமிப்பும் இல்லை எனக் கூறி அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் அமைக்கப்பட்ட லே-அவுட்டில், தற்போதைய அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ள பகுதிக்கு நடுவே வாகனப் பாதை செல்லும் வகையில் திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், மாற்றுப் பாதை ஏற்படுத்தப்பட்டு, அருகிலேயே 24 அடி அகலத்தில் வாகனப் பாதை அமைக்கப்பட்டதாகவும், தற்போது அந்தப் பாதையைத்தான் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருவதாகவும் குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி, அடுக்குமாடி குடியிருப்புக்கு நடுவே உள்ள பகுதியை அகற்றி மீண்டும் வாகனப் பாதை அமைக்க அதிகாரிகள் முயற்சிப்பதாக குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கும் குடியிருப்புவாசிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகி உரிய அனுமதி பெறுமாறு அதிகாரிகள் குடியிருப்புவாசிகளிடம் அறிவுறுத்தினர். இதையடுத்து, ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த நடவடிக்கையால் தங்களது குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் உள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
