திருச்சி காட்டூரை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் மூக்கையா (22). இவர் தனியார் பஸ் நடத்துனராக பணியாற்றி வருகிறார். நேற்று முன் தினம் வழக்கம் போல் பேருந்து சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துவாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சூளக்கரை மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறக்க வேண்டிய பெண் பயணி ஒருவரை பஸ் ஸ்டாண்டில் இருந்து சற்று தள்ளி, நிறுத்தி இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண் மூக்கையாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் மூக்கையா அந்த பெண் பயணியை ஒருமையில் (போடி) திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் பேருந்து துவாக்குடி சென்று மீண்டும் சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி வந்த போது சூளக்கரை மாரியம்மன் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த இளைஞர்கள் 6 பேர் பஸ்சில் ஏறி மூக்கையாவை கடுமையாக தாக்கினர். இதில் கடுமையான காயமடைந்த மூக்கையா காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்களான 6 இளைஞர்கள் மீது திருச்சி காந்தி மார்கெட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் – இதில் சந்தோஷ், பாலாஜி மற்றும் ராகுல் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்.