புதுச்சேரியில் அரசு உயர் அதிகாரிகள் 6 மாதங்களுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன.
நாடு முழுவதும் எரிபொருள் சிக்கன நடவடிக்கை எடுப்பதற்கு அண்மையில் பிரதமர் ஒரு அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. எரிபொருள் நுகர்வோர்க்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. துணை நிலை ஆளுநர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் வெளிநாடு பயணங்களை அரசு உயர் அதிகாரிகள் 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். இந்திய மற்றும் ஆலோசனை சுற்று பயணம் என குறிப்பிட்டு யாரும் வெளிநாடு செல்லக்கூடாது.
மேலும், அரசும் அதிகாரப்பூர்வமான வாகனங்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்காக வாகன பகிர்வு நடைமுறைப்படுத்த வேண்டும். தேவையற்ற வாகன பயன்பாடு தவிர்க்க படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமில்லாமல் அரசு உயர் அதிகாரிகள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். கூட்டங்கள், ஆய்வு கூட்டங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கூட்டங்களை நேரடியாக நடத்தாமல் காணொலி வாயிலாக நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசு அலுவலர்கள் மின்சார சேமிப்பை பின்பற்ற வேண்டும். குளிர்சாதன பெட்டி மற்றும் கணினி போன்றவற்றை தேவையற்ற நேரங்களில் நிறுத்திவைக்க வேண்டும். மேலும் அதிகாரிகளும் மற்றும் பணியாளர்களும் வீடுகளுக்கு செல்வதை தவிர்த்து அலுவலகத்திற்கு உணவை கொண்டு வர வேண்டும் என்ற துணை ஆளுநர் உத்தரவு அனைத்து துறைகளுக்கும் அனுப்பட்டுள்ளது.
