Skip to content
Home » 48 மணி நேரம் அவகாசம்… அரசு பஸ்களை ஆய்வு செய்ய திடீர் உத்தரவு…

48 மணி நேரம் அவகாசம்… அரசு பஸ்களை ஆய்வு செய்ய திடீர் உத்தரவு…

  • by Senthil

திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசுப்பேருந்து ஒன்றின் இருக்கை சேதமடைந்து பயணத்தின் போது கீழே உடைந்து விழுந்தது. பேருந்து சென்று கொண்டிருந்த போது, இருக்கை உடைந்து சாலையில் விழுந்ததில் அதில் அமர்ந்திருந்த நடத்துநரும் கீழே விழுந்து காயமடைந்தார்.

இதே போல் மற்றொரு அரசுப்பேருந்தின் படிக்கட்டுகள் பெயர்ந்து கீழே விழுந்தது. திருப்பனத்தால் அருகே அரசுப்பேருந்து ஒன்று பழுதடைந்து கிளம்பாததால் அதனை சக ஓட்டுநர்களும், நடத்துநர்களும் இணைந்து தள்ளி, கிளப்ப முயற்சித்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

பேருந்தில் இருந்து நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று சாலையில் விழுந்ததால் பரபரப்பு
நடுரோட்டில் திடீரென நின்ற அரசு பேருந்தை, பேருந்தினுள் இருந்த பள்ளி மாணவிகள் கீழிறங்கி தள்ளி சென்ற வீடியோவும் வெளியாகி வைரலானது. தமிழகம் முழுவதுமே தொடர்ந்து வெளியாகும் இது போன்ற செய்திகள் பயணிகளுக்கு அரசு பேருந்துகளின் தரம் குறித்து அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ‘அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிய பேருந்துகள் வாங்காததே இந்த நிலைக்கு காரணம்’ என குற்றம் சாட்டியிருந்தார். தமிழ்நாடு அரசு சார்பில் விரைவில் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு, பழைய பேருந்துகள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த சம்பவங்கள் தொடர்பாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் போக்குவரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ள அரசுப்பேருந்துகள் அனைத்தையும் ஆய்வு செய்து, 48 மனி நேரத்திற்குள் அறிக்கை வழங்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த பணிமனை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!