ட்ரைலர் லாரியில் 100-க்கும் மேற்பட்ட தட்டுகள்… பிரம்மாண்டமாக சென்ற தாய்மாமன் சீர்!
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட செங்குறிச்சி கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமான தாய்மாமன் சீர் நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்குறிச்சியைச் சேர்ந்த மணி ராங்கிபிரியர் மகன் பாண்டித்துறை அவர்களின் தாய்மாமன் இல்லத்தில் இருந்து, செங்குறிச்சி கருப்பையா அவர்களின் தம்பியின் பேத்தி சாதனா இல்லத்திற்கு இந்த பிரம்மாண்டமான தாய்மாமன் சீர் எடுத்துச் செல்லப்பட்டது.
மரபு மாறாமல், தங்களது வசதிக்கு ஏற்ப தாய்மாமன் சீர் வழங்கும் வழக்கத்தின் அடிப்படையில், 100-க்கும் மேற்பட்ட சீர் தட்டுகள் ட்ரைலர் லாரியில் அணிவகுத்துச் சென்றன.
மா, பலா, பிஸ்கெட், வாசனை திரவியப் பொருட்கள், மளிகை சாமான்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கட்டில், நாற்காலி, குத்துவிளக்கு உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சீர் வரிசையில் இடம்பெற்றிருந்தன.
மேலும், தமிழர்களின் பாரம்பரியத்தையும் விவசாய வாழ்க்கையையும் பிரதிபலிக்கும்

வகையில் ஜல்லிக்கட்டு காளை, பால் கறக்கும் பசுமாடு, ஆடு உள்ளிட்டவையும் சீர் வரிசையில் இடம்பெற்றன.
இதனுடன் நகைகள், பணம், மலர் மாலைகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.

தப்பு மேளம் முழங்க, பட்டாசுகள் வெடிக்க, உறவினர்கள் ஆடி பாடி மகிழ்ச்சியுடன் இந்த பிரம்மாண்டமான தாய்மாமன் சீரை எடுத்துச் சென்றனர்.
நவீன காலத்திலும் தமிழர்களின் பாரம்பரியம், உறவுமுறை மற்றும் தாய்மாமன் சீர் என்ற கலாச்சாரம் தொடர்ந்து உயிர்ப்புடன் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.
