நாகையிலிருந்து திருவாரூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்தியவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 90 கிலோ எடையிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் மாவட்ட எஸ்.பி சதீஷ்குமார் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை, ஆன்லைன் லாட்டரி விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது, மணல் கடத்தல், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்டு வருபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாகையிலிருந்து ஒருவர் டூவிலரில் குட்கா பொருட்களை கடத்தி வருவதாக மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று வாளவாய்க்கால் ரவுண்டானா அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் டூ விலர் ஒன்றில் சாக்கு மூட்டையும் வந்த நபரை மடக்கிப்பிடித்தனர். சோதனையில் அவரிடம் 90 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து குட்கா கடத்தி வந்த நாகை மாவட்டம் அந்தனபேட்டை மஞ்சகொல்லை பகுதியை சேர்ந்த அப்துல்கலாம் மகன் ஹலீகுல் ஜமான் (50) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குட்கா மற்றும் டூ விலரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
