Skip to content
Home » 2023 புத்தாண்டு நாளை பிறக்கிறது….உலகம் முழுவதும் கொண்டாட்டத்துக்கு மக்கள் தயார்

2023 புத்தாண்டு நாளை பிறக்கிறது….உலகம் முழுவதும் கொண்டாட்டத்துக்கு மக்கள் தயார்

ஆங்கில புத்தாண்டான 2023-ம் ஆண்டு இன்று நள்ளிரவில் பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்க மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகிறார்கள். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று இரவு களை கட்டும். குறிப்பாக சென்னை மாநகரில் மக்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். மெரினா கடற்கரையில் இன்று மாலையில் இருந்தே மக்கள் கூட தொடங்கி விடுவார்கள். நள்ளிரவு 12 மணி அளவில் மெரினா கடற்கரை கடல்போல காட்சி அளிக்கும். பல்லாயிரக்கணக்கான மக்கள் மெரினாவில் திரண்டு ‘ஹேப்பி நியூ இயர்’ என உற்சாகமாக குரல் எழுப்பி புத்தாண்டை வரவேற்று மகிழ்வார்கள்.

கோவில்கள், தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக இன்று இரவு 9 மணி முதல் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் புத்தாண்டையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா மேற்பார்வையில் 16 ஆயிரம் போலீசார் இன்று இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் எல்லை மீறுபவர்களை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக புத்தாண்டு வாழ்த்து சொல்வது போல நடித்து பெண்களிடம் பாலியல் சீண்டலில் யாராவது ஈடுபட்டால் அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்காக சென்னை மாநகரம் முழுவதும் விடிய விடிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்கள். சென்னை மாநகர சாலைகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறி யாராவது வாகனங்களை இயக்கினால் அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னையை போன்று அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதன்படி மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.திருச்சி மாவட்டத்திலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு  போலீசார் கடுமையான  நெறிமுறைகளை அறிவித்துள்ளனர். மீறுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!