Skip to content
Home » தி்ருச்சி உள்பட 19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும்……4ம் தேதி கத்திரி வெயில் தொடக்கம்

தி்ருச்சி உள்பட 19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும்……4ம் தேதி கத்திரி வெயில் தொடக்கம்

தமிழ்நாட்டில்  இந்த ஆண்டு  வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி  வருகிறார்கள்.  பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து விட்டது.  வெயிலின் உக்கிரத்தை தணிக்க எத்தனை குளிர்பானங்கள்  குடித்தாலும் மக்கள் வெயிலின் தாக்கலில் இருந்து மீள முடியவில்லை.சிறிது தூரம் நடந்தாலே சோர்வடையும் நிலைக்கு வெயில் தாக்குகிறது.

தமிழகத்தின்  உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இப்போதே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. கரூரில் நேற்று  மிக அதிகமாக 111.2 டிகிரி வெயில் பதிவானது. இதனால் அந்த பகுதிகளுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் விடுத்து வருகிறது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் இயல்பைவிட 5 டிகிரி முதல் 9 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் எனவும், அதில்சில இடங்களில் 110 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி வெயில் பதிவாகலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 19 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம்(கத்திரி வெயில்) சித்திரை 21-ல் தொடங்கி வைகாசி 15-ல் முடிவடையும். அதேபோல் இந்த ஆண்டு மே மாதம் 4ம் தேதி துவங்கி மே 28ம் தேதி முடிவடைகிறது. கத்திரி வெயிலுக்கு முன்னரே வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று கரூரில் தமிழ்நாட்டிலேயே மிக அதிகமாக 111.2 டிகிரி பாரன் ஹீட் வெப்பம் பதிவானது.  கரூர் வரலாற்றில் இதுவே மிக அதிக வெயில் என கூறப்படுகிறது.  இந்த நிலையில் வெயிலின் உச்சம் என சொல்லக்கூடிய அக்னி நட்சத்திர காலத்தில் இன்னும் வெயில்  அதிகமாக இருக்குமோ என்ற அச்சம் மக்களை மேலும் வாட்டி வதைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!