Skip to content
Home » கேரளாவில் கனமழை… வயநாடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்

கேரளாவில் கனமழை… வயநாடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று பல மாவட்டங்களில் விடாமல் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கொல்லம், ஆலப்புழா, திருச்சூர், கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பலத்த காற்று மற்றும் மரங்கள் சாய்ந்ததால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. பாலக்காடு வடக்கஞ்சேரியில் தென்னை மரம் விழுந்ததில், தங்கமணி என்பவர் உயிர் இழந்தார். கனமழை காரணமாக மத்திய கேரளாவில் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பம்பை ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பலத்த காற்று காரணமாக பல மாவட்டங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் கடல் அலைகள் ஆக்ரோஷமாக அடித்தப்படி உள்ளன. கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 3 பேர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு இருவஞ்சி புழாவில் ஒருவரும், மலப்புரம் அமரம்பலத்தில் ஒரு பெண் மற்றும் குழந்தை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். கனமழை நீடிப்பதால் கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால் பெரியாறு, முத்திரபுழா ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் வருகிற சனிக்கிழமை வரை மோசமான வானிலையே நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!