Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நேபாளத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு- 21 பேர் பலி

நேபாளத்தில் இயற்கை மீண்டும் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இடைவிடாது பெய்த கனமழையால், நேபாளத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள முஸ்தாங் மாவட்டத்தில் மலைப்பகுதியின் ஒரு பகுதி வெறும் ஆறு வினாடிகளில் காளி கண்டகி ஆற்றுக்குள் சரிந்து விழுந்தது. இதனால் காளி கண்டகி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மியாக்டி மாவட்டத்தில் உள்ள பல குடியிருப்புகள் நீரில் மூழ்கின. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

சியாங்ஜா மற்றும் குல்மி மாவட்டங்களை இணைக்கும் பெய்லி பாலத்தையும் வெள்ளம் அடித்துச் சென்றது. இதேபோல், சாப்பாக்கோட் மற்றும் பால்பா மாவட்டத்தின் ராம்பூர் பகுதிகளை இணைக்கும் பாலமும் சேதமடைந்தது.

பாக்லூங் மாவட்டத்தின் காளி கண்டகி பகுதியில் ஆற்றங்கரையோரம் அமைந்திருந்த அரசு கட்டடமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மனாங் மாவட்டத்தில் சாமே பஜார் மற்றும் சாமே கோலா பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனைக் கண்டு அச்சமடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓட்டம் பிடித்தனர். மனாங் மாவட்டத்தின் சாமியே பகுதியில் மலைப்பகுதியில் அடுத்தடுத்து வீடுகள் இடிந்து விழுந்ததைக் கண்டு, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மக்கள் தலைதெறிக்க ஓடினர்.

மியாக்டி மாவட்டத்தில் காளி கண்டகி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம், ஆற்றங்கரையோரம் இருந்த பல்வேறு மின்கம்பங்களை வேரோடு பிடுங்கி அடித்துச் சென்றது.

ஜர்கோட், மியாக்டி மற்றும் சங்குவாசபா உள்ளிட்ட மலை மாவட்டங்களில் நிலச்சரிவில் சிக்கிய மக்களை, அவசரகால ஹெலிகாப்டர்கள் மூலம் ராணுவ வீரர்கள் மீட்டனர். ஆபத்து நிறைந்த பகுதிகளில் வசித்து வந்த சுமார் 3,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் கடந்த மாதம் பெருமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமும் கவலையும் அடைந்துள்ளனர்.

error: Content is protected !!