பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு விபத்தில், மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் (இதில் 7 பேர் பெண்கள்). நச்சு வாயுவைச் சுவாசித்த சில தொழிலாளர்களுக்கு வாய் மற்றும் மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தையடுத்து, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழு (NDRF) சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
இக்கோர விபத்து குறித்து விசாரிக்கத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர்கள் தலைமையில் தமிழ்நாடு அரசு உடனடியாக விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கையையும், 3 நாட்களுக்குள் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, விபத்து நடந்த தொழிற்சாலையின் உரிமையாளர் மோகன் (59) மற்றும் மேலாளர் டேனியல் (68) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
