Skip to content
Home » இந்திய பெண் தொழிலதிபர் அமிர்தா மீது ஹிண்டன்பா்க் அடுத்த தாக்குதல்

இந்திய பெண் தொழிலதிபர் அமிர்தா மீது ஹிண்டன்பா்க் அடுத்த தாக்குதல்

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தது. இந்த விவகாரம் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் பற்றி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி, கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர். இதனால், தொடர்ந்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்த போவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆய்வறிக்கை வெளியிட்ட நிலையில் ஹிண்டன்பர்க் அடுத்த புதிய அறிக்கை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியானது  இந்த நிலையில் அதானி குழுமத்தை தொடர்ந்து பிளாக் நிறுவனத்தின் மீது முறைகேடு புகார்களை முன்வைத்து ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமிர்தா அஹுஜா என்பவர் மீதும் ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பிளாக் நிறுவனம் மொபைல் வங்கி சேவைகள் மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி ஜாக் டார்சியால் தொடங்கப்பட்டதாகும். டிஜிட்டல் நிதி சேவைகளை வழங்குவதை பிரதான தொழிலாக பிளாக் செய்து வருகிறது.

இந்நிலையில், பிளாக் நிறுவனம் மீது மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து ஜாக் டார்சியின் சொத்து மதிப்பு 526 மில்லியன் டாலருக்கு மேல் சரிந்துவிட்டது. பிளாக் நிறுவனம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், பிளாக் நிறுவனம் சட்ட விரோதமான முறையில் வருவாய் ஈட்டியுள்ளதாகவும், மிகையான புள்ளி விவரங்களை வைத்து முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது

பிளாக் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான இந்திய வம்சாவளியை சேர்ந்த அமிர்தா அஹுஜா மீது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. பல மில்லியன் டாலர் மதிப்புள்ள பிளாக் பங்குகளை ஜாக் டார்சி, அமிர்தா அஹுஜா உள்ளிட்டோர் மொத்தமாக விற்றதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அமிர்தா அஹுஜா ஹார்வர்ட் பல்கலைக்கழகம், டியூக் பல்கலைக்கழகம், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸ் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்தவர்.

2019ம் ஆண்டில் இவர் பிளாக் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம்தான் இவருக்கு தலைமை நிதி அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பிளாக் நிறுவனத்தில் இணைவதற்கு முன் ஏர்பிஎன்பி, மெக்கின்சி, வால்ட் டிஸ்னி, மோர்கன் ஸ்டான்லி, ஃபாக்ஸ் நெட்வொர்க் போன்ற பிரபல கார்ப்பரேட் நிறுவனங்களில் அமிர்தா அஹுஜா பணிபுரிந்துள்ளார். 2022ம் ஆண்டு ஃபார்ச்சூன் நிறுவனத்தின் உலகின் சக்திவாய்ந்த பெண்கள் மாநாட்டிலும் அமிர்தா அஹுஜா இடம்பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!