ரியாத்: சவூதி அரேபியா மீது ஏமனின் ஹூதி அமைப்பு நேற்று (ஆகஸ்ட் 6) நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 11 பேர் காயமடைந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதோடு, ஹூதியுடன் ஈரானின் ஆதரவுடன் இயங்கும் மற்ற ஈராக்கிய அமைப்புகள் ஒன்றாகத் திட்டமிட்டுத் தங்கள்மீது தாக்குதல் நடத்தவிருப்பது கிட்டத்தட்ட உறுதி என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
2014-ம் ஆண்டு ஏமனின் முன்னாள் அதிபர் அப்த்ரப்பூ மன்சூர் ஹாதி அரசை அதிகாரத்தில் இருந்து அகற்றியதுடன் அந்நாட்டின் தலைநகரான சனாவை ஹவுதி கிளர்ச்சிக் குழு கைப்பற்றியது. அன்றிலிருந்து, சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசுக்கும் ஈரான் ஆதரவு ஹவுதி படைக்கு இடையே உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது.
எனினும், 2022-ஆம் ஆண்டு இரு தரப்புக்கும் இடையே அமலுக்கு வந்த போர் நிறுத்தத்திற்குப் பிறகு, பெரிய அளவிலான தாக்குதல்கள் நடைபெறாமல் இருந்து வந்தன. இந்தச் சூழலில், ஹவுதி கிளர்ச்சிப் படையினர் நடத்திய இந்தத் தாக்குதல், ஏமனில் மீண்டும் உள்நாட்டுப் போரின் பதற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவின் நஜ்ரான் மாநிலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் சவூதியைச் சேர்ந்த ஏழு பேர், ஏமனைச் சேர்ந்த ஒருவர், எகிப்தியர்கள் இருவர், பாகிஸ்தானியர்கள் ஒருவர் காயமுற்றதாகவும் பாதிக்கப்பட்டவர்களில், இரண்டாம் நிலை தீக்காயங்களுக்கு உள்ளான 4 வயது குழந்தையும் அடங்கும் என்று மேஜர் ஜெனரல் துர்க்கி அல் மாலிக்கி என்ற அந்த அதிகாரி தெரிவித்தார்.
சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறி, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது ஈரான் ஆதரவு ஹூதிகள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்துவதாக மாலிகி குற்றம் சாட்டினார். மேலும், பொதுமக்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கூட்டணி தொடர்ந்து எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளையும் சவூதி கூட்டணி இராணுவம் தொடர்ந்து மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
