96′ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை கெளரி கிஷன். ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த பிறகு, மலையாளத் திரையுலகிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
சமீபத்தில் ‘ஹாட் ஸ்பாட்’, ‘போட்’ போன்ற தமிழ் படங்களிலும், மலையாளத்தில் ‘சாஹசம்’ படத்திலும் கெளரி நடித்துள்ளார். ‘பேப்பர் ராக்கெட்’, ‘சுழல்’ போன்ற வெப் தொடர்களிலும் இவர் தீவிரமாகப் பங்கெடுத்து, தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கதாநாயகி மற்றும் துணை நடிகையாகத் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘LIK’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கெளரி, தற்போது ‘OTHERS’ என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். அந்த அதர்ஸ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
நடிகைகளிடம் மட்டும் ஏன் இப்படி?: இந்நிலையில், ‘OTHERS’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (நவம்பர் 6) நடைபெற்றது. அப்போது, ஒரு பத்திரிகையாளர் கதாநாயகனைப் பார்த்து, “கெளரி கிஷனின் எடை என்ன?” என்று கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியைக் கேட்டு கெளரி கிஷன் மிகுந்த கோபமடைந்தார். இது குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி, “எனது எடை பற்றிய தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தவறு. நான் 20 கிலோ இருக்கலாம், அல்லது 80 கிலோவாகவும் இருக்கலாம். அதைப் பற்றி நீங்கள் எப்படி கேட்கலாம்? அதிலும், ஹீரோவிடம் எனது எடையைப் பற்றி கேட்பது ஏன்? எனது எடை தெரிந்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.
ஹீரோக்களிடம் கேட்பீங்களா?: தொடர்ந்து பேசிய கெளரி, “ஆண் நடிகர்களிடம் இதுபோன்ற தனிப்பட்ட கேள்விகளை எந்தப் பத்திரிகையாளரும் கேட்பதில்லை. நடிகைகளிடம் மட்டும் ஏன் இந்த மாதிரியான தனிப்பட்ட, உடல் சார்ந்த கேள்விகளைக் கேட்கிறார்கள்? இதுபோன்ற செயல்களை இயல்பானதாக மாற்றுவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள்” என்று கூறினார். இதற்குப் பதிலளித்த அந்த நபர், “நான் எடை என்ன என்றுதானே கேட்டேன்” என நியாயமற்ற முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கெளரி, “இந்த அரங்கத்தில் இத்தனை பேர் இருக்கிறீர்கள், ஆனால் அவர் கேள்வி கேட்டது தவறு என்று யாரும் கண்டிக்கவில்லை. இங்கு என்னைத் தவிர வேறு ஒரு பெண் கூட இல்லை. நான் தனியாக நின்று இதுபோன்ற கேள்விகளையும், அவரது வாக்குவாதங்களையும் எதிர்கொள்கிறேன்” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
சின்மயி ஆதரவு: இந்தச் சூழ்நிலையில், அந்தப் பத்திரிகையாளர் கெளரி கிஷனையே மன்னிப்பு கேட்கச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், அதெல்லாம் முடியாது, நீங்க பண்ணது பாடி ஷேமிங் என விளாசி எடுத்தார். அந்த காட்சிகள் மீடியாக்களில் வெளியான நிலையில், பாடகி சின்மயி தனது ஆதரவை கெளரி கிஷனுக்கு தெரிவித்திருந்தார்.
கவின் என்ன சொன்னார்: இந்நிலையில், இளம் நடிகர் கவின் “உள்ளேயும் வெளியேயும் நீங்கள் ரொம்பவே அழகாகவும் இன்ஸ்பையரிங்காகவும் இருக்கீங்க கெளரி, எப்போதுமே இப்படியே இருங்க” என கவின் வாழ்த்தி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னணி நடிகர்களும் கெளரி கிஷனின் இந்த போல்டான பேச்சுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் சில யூடியூபர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தரம் தாழ்ந்த கேள்விகளை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேட்பதை தவிர்க்க வேண்டும் என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

