Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு ஆஸ்பத்திரியில் இனி முன்பதிவு நடைமுறை-அமைச்சா் அருண்ராஜ்

Health Minister KG Arunraj Government Hospital Appointment App Chennai

அமைச்சா் அருண்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் கருத்துகளை அறிந்து கொள்வதற்காக சிறப்புக் குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழுவினா் வாரந்தோறும் கூட்டம் நடத்தி, நோயாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது, மருத்துவமனை சுகாதாரத்தை உறுதி செய்வது குறித்து ஆலோசிப்பதுடன், தொடா் கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபடுவா்.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் காத்திருக்கும் நேரம் அதிகமமாக உள்ளது. குறிப்பாக, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கூட்டம் பெருமளவு வருகிறது. சிகிச்சைக்காக வரும் மக்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

எனவே, தனியாா் மருத்துவமனைகளைப் போன்று முன்பதிவு (அப்பாயின்மென்ட்) வசதி அரசு மருத்துவமனையிலும் ஏற்படுத்தப்படும். இதற்காக தனியாா் நிறுவனம் மூலம் ‘பிரத்யேக செயலி’ உருவாக்கப்படும். அதில், ஆதாா் அட்டையைப் பயன்படுத்தி காலை 8 மணி முதல் 9 மணி வரை மருத்துவ சேவைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன் அடிப்படையில் மருத்துவ சிகிச்சைகள், புற நோயாளிகள் சேவைகள் வழங்கப்படும்.

இந்த புதிய நடைமுறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அரசு மருத்துவமனைகளில் தனியாா் மருத்துவமனைகளுக்கு நிகரான வசதிகள் உள்ளன. குறிப்பாக, இதய நலம், மகப்பேறு சிகிச்சை, பக்கவாதம், டயாலிசிஸ் உள்பட பல உயா் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

தனியாா் மருத்துவமனையில் மகப்பேறு பரிசோதனைக்கு சென்றால் ரூ.60 ஆயிரத்துக்கும் மேல் செலவாகக்கூடும். ஆனால், அரசு மருத்துவமனையில் அந்த நிலை இல்லை. அதேபோன்று, அறுவை சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகளில் குறைந்தது ரூ.80 ஆயிரம் செலவாகும். காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் கட்டணமின்றி அவை வழங்கப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை நம்பி வந்து சிகிச்சை பெற வேண்டும்.

தமிழகம் முழுவதும் புதிதாக சிறப்பு மருத்துவா்கள், செவிலியா் பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. மருத்துவமனைகளில் பெரிய அளவில் மின்தடை இல்லை. மின்தடை ஏற்பட்டாலும் நோயாளிகள் பாதிக்காத வகையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

தடையற்ற மின் சேவையை மருத்துவமனைகளில் உறுதி செய்ய மக்கள் நல்வாழ்வுத் துறை, பொதுப்பணித் துறை, மின்வாரியம் ஆகியவை ஒருங்கிணைந்து சிறப்புக் குழு அமைக்கப்படும்.

அரசு மருத்துவமனைகளின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது காலத்தின் கட்டாயமாகும். இந்த புதிய மொபைல் செயலி முன்பதிவு முறையானது, சாமானிய மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு தடையற்ற மருத்துவச் சேவைக்கும் அடித்தளமிடும். அதே வேளையில், கிராமப்புற மக்களும், தொழில்நுட்ப வசதி இல்லாத முதியவர்களும் பயன்பெறும் வகையில் மருத்துவமனைகளில் நேரடி முன்பதிவுக்கான எளிய மாற்று வழிகளும் தொடர்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். இந்தச் சீர்திருத்தம் தமிழக மருத்துவத்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

📍 சென்னை, ஜூன் 13, 2026 — ETamilNews நிருபர்

error: Content is protected !!