கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான விஜய் பிரச்சாரக் கூட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.
இந்த வழக்கு சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் கரூர் தற்காலியாக சிபிஐ அலுவலகத்தில் காவல்துறையினர், பொதுமக்கள், பாதிக்கப்பட்ட

குடும்பத்தினர், அரசு அதிகாரிகள், தவெக முக்கிய நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் நேற்று விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், காவலர்கள் நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக காவல் ஆய்வாளர் மணிவண்ணன், சதீஷ் மற்றும் உதவி ஆய்வாளர் ஆர்த்தி, ரூபினி, சித்ராதேவி என 5 காவலர்கள் விசாரணைக்கு ஆஜராகி

உள்ளனர்.
தேர்தலுக்குப் பிறகு கரூர் துயர சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை மீண்டும் சூடு பிடித்துள்ள நிலையில், பல்வேறு காவலர்கள் அடுத்தடுத்து விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக கரூர் துயர சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சம்பந்தப்பட்ட கரூர் நகர காவல் ஆய்வாளரும், தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தவருமான மணிவண்ணன் தற்போது சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்
இவர் டெல்லி அலுவலகத்தில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கரூர் துயரச் சம்பவத்தின் உண்மைகளை வெளிக்கொண்டு வருவதில் சிபிஐ எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கைகள் மிக முக்கியமான நகர்வாகும். ஐந்து அதிகாரிகள் அடுத்தடுத்து ஆஜராகியுள்ள சூழலில், இந்த வழக்கின் பின்னணியில் உள்ள முழுமையான உண்மைகளும், விடுபட்ட சாட்சியங்களும் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட தரப்பிற்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்ய இந்த நடுநிலையான புலனாய்வு இறுதிவரை தொடர வேண்டும்.
கரூர், ஜூன் 12, 2026 — ETamilNews நிருபர்
