Skip to content
Home » ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம்….. தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது….. ஜவாஹிருல்லா

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம்….. தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது….. ஜவாஹிருல்லா

  • by Senthil

மனித நேய மக்கள் கட்சி தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கும் காவிரி படுகை என்பது, ராமநாதபுரம் மாவட்டம் வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையாகிய ஹெல்ப் அடிப்படையில் மூன்றாவது சுற்றுத் திறந்தவெளி ஏலம் மூலம் ஓ.என்.ஜி. சி. நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403 சதுரகிலோ மீட்டர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது. தற்போது அப்பகுதியில் 2,000 முதல் 3,000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. கிணறு ஒன்றுக்கு 33 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் மொத்தமாக 20 சோதனை கிணறுகளை 675 கோடி ரூபாய் செலவில் அமைக்க முடிவுசெய்துள்ளது.
சோதனை கிணற்றுக்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை மற்றும் கடலாடி வட்டம் மற்றும் சிவகங்கையின் தேவகோட்டை‌ வட்டத்தில் அமைக்க ஓ.என்.ஜி.சி. அனுமதி கோரியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ள நிலையில் ராமநாதபுரத்தில் திட்டத்தைத் தொடங்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் செயலுக்குத் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது.
அரியலூர், கடலூர் மாவட்டங்களில் இத் திட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கவில்லை. இதனை முன் மாதிரியாகக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்திலும் சூழலியலைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!