தமிழ் திரையுலகை உலுக்கிய தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி மரணம் குறித்து பலரும் தங்களின் நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ தற்போது பெரிதும் பேசப்படுகிறது. அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் சவுத்ரியின் மனிதநேயத்தையும், அவரால் உருவான வாழ்க்கைகளையும் வெளிப்படுத்துகிறது.
தமிழ் சினிமாவுக்கு அடித்தளம் அமைத்தவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல மொழிகளில் வெற்றிப்படங்களை தயாரித்து, பல தலைமுறை கலைஞர்களை உருவாக்கியவர் ஆர்.பி. சவுத்ரி. விஜய்க்கு ‘பூவே உனக்காக’ போன்ற படங்கள் மூலம் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைத்தது. அதேபோல் அஜித் குமார் உள்ளிட்ட பல நடிகர்களின் வளர்ச்சியிலும் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
விக்ரமன் உருக்கமான பேச்சு இயக்குநர் விக்ரமன் தனது வீடியோவில் கூறியதாவது, “40 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநராக வேண்டும் என்ற கனவுகளோடு சென்னைக்கு வந்தேன். அப்போது என்னிடம் எதுவுமே இல்லை. உதவி இயக்குநராக வேலை பார்த்து, ஒரு நாள் இயக்குநராக வேண்டும் என்று பல தயாரிப்பு நிறுவனங்களின் கதவுகளை தட்டிக்கொண்டே இருந்தேன். அந்த நாட்களில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு இருந்தேன். அப்போது தான் ஆர்.பி. சவுத்ரி சாரை சந்தித்து ஒரு கதை சொன்னேன். அவர் அந்தக் கதையை கேட்டவுடன் எந்த தயக்கமும் இல்லாமல் உடனே ‘ஓகே’ சொன்னார். அந்த படம் தான் ‘புது வசந்தம்’. அந்த படம் வெளியான பிறகு என் வாழ்க்கையே மாறிவிட்டது. இன்று நான் வசிக்கும் வீட்டிற்கே ‘புது வசந்தம்’ என்று பெயர் வைத்திருக்கிறேன். இன்று நான் நிம்மதியாக சாப்பிட்டு, அமைதியாக வாழ்கிறேன் என்றால், அது அவர் போட்ட பிச்சை.
அவர் இல்லாமல் போய்விட்டார் என்பது எனக்கு மிகப்பெரிய துக்கம். அவர் எப்போதும் 100 படங்களை தயாரிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த கனவு நிச்சயம் நிறைவேறும். ஆனால் அதை பார்க்க அவர் இல்லை என்பதே மிகவும் வேதனை அளிக்கிறது.” என்று இயக்குனர் விக்ரமன் கண் கலங்க பேசி இருக்கிறார். நிறைவேறாத கனவு ஆர்.பி. சவுத்ரியின் நீண்டநாள் ஆசை, தனது 100வது படத்தை விஜய் வைத்து உருவாக்குவது. ஆனால் விஜய் அரசியலுக்கு சென்றதால் அந்த ஆசை நிறைவேறவில்லை. சமீபத்திய நிகழ்ச்சியில்கூட இதை அவர் பகிர்ந்திருந்தார். தற்போது இந்த தகவல் மீண்டும் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நிகழ்வு சவுத்ரி கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி, அவரது மகன் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் படத்தின் வெற்றி விழா. அந்த மேடையில் தனது பேரனை அழைத்த தருணம் தற்போது வைரலாகி வருகிறது. குடும்பத்துடன் இருந்த அந்த சந்தோஷமான தருணமே அவரது கடைசி நினைவாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான அரசியல் வெற்றி தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக இருக்கும் நிலையில், அவரை ஆரம்பத்தில் முன்னேற்றிய தயாரிப்பாளரின் மறைவு அந்த மகிழ்ச்சிக்குள் ஒரு பெரிய சோகத்தை சேர்த்துள்ளது. விஜய் விரைவில் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் “இந்த வெற்றியை பார்த்திருக்க வேண்டியவர் அவர் தான்” என்று உருக்கமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மறக்க முடியாத மனிதர் ஆர்.பி. சவுத்ரி என்பது ஒரு தயாரிப்பாளர் என்ற அளவை தாண்டி, பலருக்கு வாழ்க்கை கொடுத்த மனிதர். அவரின் மறைவு, ஒரு மனிதரை இழந்த துக்கம் மட்டுமல்ல; ஒரு காலத்தையே இழந்த வெற்றிடமாக தமிழ் சினிமாவில் நினைவுகூரப்படும்.

