Skip to content
Home » மழையால் ஆட்டம் பாதிப்பு……மே.இ.தீவு- இந்தியா 2வது டெஸ்ட் டிரா

மழையால் ஆட்டம் பாதிப்பு……மே.இ.தீவு- இந்தியா 2வது டெஸ்ட் டிரா

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 438 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 255 ரன்களும் எடுத்தது.

183 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை அதிரடியாக ஆடிய இந்தியா 12.2 ஓவர்களில் 100 ரன் திரட்டியது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகத்தில் 100 ரன்களை தொட்ட டெஸ்ட் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன்பு 2001-ம் ஆண்டு ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வங்காளதேசத்துக்கு எதிராக இலங்கை 13.2 ஓவர்களில் 100 ரன்களை வேகமாக எடுத்ததே சாதனையாக இருந்தது.

இந்த 22 ஆண்டு கால சாதனையை இந்தியா முறியடித்தது. கேப்டன் ரோகித் சர்மா 57 ரன்களும், ஜெய்ஸ்வால் 38 ரன்களும் விளாசினர். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 33 பந்துகளில் அரைசதம் நொறுக்கினார். இந்திய அணி 24 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 181 ரன்களுடன் ‘டிக்ளேர்’ செய்து, வெஸ்ட் இண்டீசுக்கு 365 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இஷான் கிஷன் 52 ரன்களுடனும் (34 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), சுப்மன் கில் 29 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.இதையடுத்து மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 4-வது நாள் முடிவில் 32 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. தேஜ்நரின் சந்தர்பால் (24 ரன்), பிளாக்வுட் (20 ரன்) களத்தில் இருந்தனர். 4-வது நாளில் 4 முறை மழை குறுக்கிட்டு அவ்வப்போது பாதிப்பை ஏற்படுத்தியது.  இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை புகுந்து விளையாடியது. இதனால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் மழை தொடர்ந்து குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!