Skip to content
Home » இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட்…… இன்று தொடக்கம்

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட்…… இன்று தொடக்கம்

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

இந்த தொடர் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணியினர் வெற்றியோடு தொடங்கும் வேட்கையுடன் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

புஜாராவுக்கு பதிலாக பேட்டிங்கில் 3-வது வரிசையில் ஆடுவதற்கு ‘இளம் புயல்’ ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. இதில் 21 வயதான ஜெய்ஸ்வாலுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஜெய்ஸ்வால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு சதம், 5 அரைசதம் உள்பட 625 ரன்கள் குவித்து அசத்தினார். இதே போல் டெஸ்டிலும் சக்ரவர்த்தியாக திகழுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஆவலை தூண்டியுள்ளது.

மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, அஜிங்யா ரஹானே விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பொறுப்புணர்வுடன் மட்டையை சுழற்ற வேண்டியது அவசியமாகும். பவுலிங்கில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மிரட்டுவதற்கு காத்திருக்கிறார்கள். போதிய அனுபவம் இல்லாத முகேஷ்குமார், ஜெய்தேவ் உனட்கட், ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி ஆகியோரில் இருவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும்.

இந்திய அணியை பொறுத்தவரை கடந்த 21 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராாக முழுமையாக கோலோச்சி வருகிறது. 2002-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக எந்த ஒரு டெஸ்டிலும் தோற்றதில்லை. அதாவது 2002-ம் ஆண்டில் இருந்து இவ்விரு அணிகள் மோதிய 8 டெஸ்ட் தொடர்களையும் (உள்நாட்டில் 4, வெளிநாட்டில் 4) இந்தியாவே வசப்படுத்தியுள்ளது. அத்தகைய ஆதிக்கத்தை இந்த முறையும் இந்தியா தொடருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கிரேக் பிராத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எந்த வகையிலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கடந்த ஆண்டு ஒரு டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாடியது. ஒருங்கிணைந்து முழு திறமையை வெளிப்படுத்தினால் வெஸ்ட் இண்டீஸ் நிச்சயம் அபாயகரமான அணி தான். கேப்டன் பிராத்வெய்ட், சந்தர்பாலின் மகன் தேஜ்நரின், பிளாக்வுட் நன்றாக ஆடக்கூடியவர்கள். உள்நாட்டு போட்டிகளில் ரன் குவித்ததால் முதல் முறையாக தேசிய அணிக்கு தேர்வாகியுள்ள பேட்ஸ்மேன்கள் கிர்க் மெக்கென்சி, அலிக் அதானேசும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

பந்து வீச்சில் ஜாசன் ஹோல்டர், ஜோசப், கான்வால், ரோச் அவர்களுக்குரிய நாளாக அமைந்து விட்டால் ஒருகை பார்த்து விடுவார்கள். மொத்தத்தில் உள்ளூர் மண்ணில் இழந்த பெருமையை மீட்கும் உத்வேகத்துடன் ஆடுவார்கள் என்பதால் இந்தியாவுக்கு பலமான சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை டி.டி. ஸ்போர்ட்ஸ் டி.வி. சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா, பேன் கோர்டு ஆகிய செயலியிலும் பார்க்கலாம்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!