Skip to content
Home » முதியோர், குழந்தைகள் இன்புளுயன்சா தடுப்பூசி செலுத்துவது நல்லது…. சுகாதாரத்துறை

முதியோர், குழந்தைகள் இன்புளுயன்சா தடுப்பூசி செலுத்துவது நல்லது…. சுகாதாரத்துறை

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ வைரசின் துணை வகையான இந்த வைரஸ், எச்3என்2 என அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைதான் அதிகம் தாக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, இன்புளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டிலும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இன்புளூயன்சா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் மட்டும் இன்புளூயன்சாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும். ப்ளூ காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் 7 நாட்கள் வரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.  காய்ச்சல் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து எடுக்க வேண்டும். அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். லேசான காய்ச்சல், இருமல் பாதிப்பு கொண்டவர்கள் ஏ வகை.

தீவிர காய்ச்சல் அதிக இருமல் கொண்டவர்கள் பி வகை. தீவிர காய்ச்சல் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதிற்கு மேற்பட்டோர், இணைநோய் இருப்போர் என 2 வகைகளில் இருப்பவர்களுக்கு இன்புளூயன்சாவுக்கான பரிசோதனையோ, மருத்துவமனை அனுமதியோ தேவையில்லை. இவர்கள் வீட்டுத்தனிமையில் இருந்தால் போதுமானது.

அதேநேரத்தில்  சி வகை பாதிப்பான தீவிர காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, ரத்த அழுத்த குறைவு இருந்தால் மட்டும் இன்புளூயன்சா வைரசுக்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல், உணவு உண்ணாமை, மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் இந்த ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

வீட்டு தனிமையில் இருப்பவர்கள் 24 மணி நேரமும் 104 மற்றும் 108 ஆகிய 2 எண்களை தொடர்பு கொண்டு இன்புளூயன்சா காய்ச்சல் தொடர்பான சந்தேகங்கள்,  மருத்துவ  ஆலோசனைகள் பெறலாம். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பணி புரிவோர், ஆய்வகங்களில் பணி புரிவோர் கட்டாயம் என்95 முகக்கவசம் அணிய வேண்டும். மற்றவர்கள் 3 அடுக்கு முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் ப்ளூ காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் மற்றும் இணை நோய் உள்ளோரும் ப்ளூ காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். 65 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள், 8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் ப்ளூ தடுப்பூசி செலுத்திக்கொள்வது நல்லது’ என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!