திருச்சி செயின்ட ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் தமிழ் மரபு வலியுறுத்தும் நீடித்த வளர்ச்சி இலக்குகள் என்னும் மையப்பொருளில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் இரண்டு சிறப்பு அமர்வுகளும் மூன்று ஆய்வு அரங்க அமர்வுகளும் நடைபெற்றன.
கல்லூரியின் மொழிகள் மற்றும் பண்பாட்டுப் புல முதன்மையர் முனைவர் வி.எல். ஜெயபால் முன்னிலையில் நடைபெற்ற அயலகப் பேராளர்கள் அமர்வில் கருத்தரங்கச் செயலர் முனைவர் ஜா.சலேத் அறிமுக உரை வழங்கினார். அயர்லாந்து கவிஞர் தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு, ஆஸ்திரேலியக் கவிஞர் முனைவர் சாந்தா ஜெயராஜ் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு இலக்கிய உரையாற்றினர்.
பணிமுறை இரண்டின் துணை முதல்வர் அருள்முனைவர் சி.மணி வளன், சே.ச. தலைமையில் நடைபெற்ற சிறப்பு அமர்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத்துணைத்தலைவர் கவிஞர் நா.முத்துநிலவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். அவர் உரையில் தமிழ் மரபு இன்றைய ஐ.நா அறிவித்துள்ள நீடித்த வளர்ச்சி இலக்குகளின் முன்னோடி என்பதை தகுந்த சான்றுகளுடன் எடுத்துரைத்தார்.
முனைவர் ஞா.பெஸ்கி, முனைவர் சி.ஆன்சிமோள், முனைவர் அ.சையத் ஜாகீர் ஹசன் தலைமையில் கருத்தரங்க அமர்வுகள் நடைபெற்றன. பேராளர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தனர். இந்த அமர்வுகளை முனைவர் சி.ஷகிலாபானு, முனைவர் சீனிவாசன் சிறப்பாக வழிநடத்தினர்.
